சினிமா

“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்

“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்

webteam

ஜிவா நடித்துள்ள ‘கொரில்லா’ படத்தை பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. 

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதியதிரைப்படம் கொரில்லா. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “இது ஒரு Heist காமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா  இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கூட்டணி வங்கியை கொள்ளையடித்ததா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே படத்தின் கதை.

இந்தக் கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒருநாள் யதேச்சையாக ஹேங் ஓவர் - 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.

மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்தக் கதையிலும் இடம் பெற்றிருக்கிறது. அதனால் இந்தப் படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம்.  மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவாவை விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் உண்டு” என்றார்.

இந்தப் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக  ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார்.