செய்தியாளர் - கார்த்திகேயன்
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சிக்மா’. நடிகரும் தமிழக முதல்வருமான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ள இந்த திரைப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஆக்ஷன் அட்வெஞ்சர்ஸ் ஜானரில் தயாராகியுள்ளது.
வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது தந்தை குறித்து பேசிய கருத்துகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, ’ஏதாவது ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அற்புதமான கருத்தை இதில் கூறியிருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறீர்களா’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஜேசன் சஞ்சய், ”எனக்கு Persuit Of Happiness திரைப்படம் பிடிக்கும். எப்போதுமே ஏதோ ஒரு போராட்டத்தில் இருப்பது, சரியான விஷயங்களைச் செய்ய முயல்வது, மற்றவர்களை ஊக்குவிப்பது, நம்மிடம் தொடர்ந்து நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை இப்படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும், எப்படி நல்ல குணங்களுடன் இருக்க வேண்டும் என்பதை, அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தந்தை கதாபாத்திரம் மகனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து தனது தந்தை முதலமைச்சர் விஜய் குறித்தும் பேசினார். ”எனது அப்பா மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதால், அவரைப் பற்றியும் என்னைப் பற்றியும் அரசியல் ரீதியாகவும் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்களும், அவதூறுகளும் வருவது சகஜம்தான். என்னுடைய அப்பா தற்போது ஒரு முக்கியமான பொறுப்பில் உள்ளார். இதன் காரணமாக, குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காத வகையில் நான் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தும் வகையில், எதையும் நான் செய்யக் கூடாது. இதன்காரணமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையில், சில எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கிறேன்” என்று கூறினார்.