ஜனநாயகன் படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காத சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், இன்று (ஜன.9) உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அது, வழக்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் அப்படம் பொங்கலுக்கும் ரிலீஸாகாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட, மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர், ”#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தணிக்கை வாரியத்தையும் சாடியுள்ள நிலையில், பொங்கலுக்கு வெளியாகவுள்ள இரண்டு முக்கியத் திரைப்படங்களை சென்சார் போர்டு மூலம் முடக்க மத்திய பாஜக அரசு முயன்றதாக விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பரபரப்பு வீடியோவெளியிட்டுள்ளார். "சிபிஐ, ஐடிபோல தற்போது சென்சார் போர்டை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும், அமித் ஷா தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறார் என்று அவர் சாடியுள்ளார்.
ஆனால் இவ்விவகாரம் குறித்து பதிலளித்த பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், “சென்சார் விதிகளுக்கு புறம்பாக இருந்ததாலேயே படம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்தான் தணிக்கை துறை சுதந்திரமாக செயல்படவில்லை. நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து ஆர்கே.செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை படத்துக்கு சோனியாகாந்தி சிக்கலை ஏற்படுத்தினார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இப்படி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”வாரியத்தை குறை சொன்னால் பாஜக அரசை குறை சொன்னதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் படம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை என சம்பந்தப்பட்ட ஜனநாகனே வாய் மூடி மௌனியாக இருக்கிறார்” என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதில் மற்றவர்கள் எல்லாம் பதறி, கதறி என்ன ஆகிவிடப் போகிறது எனவும் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.