ஜனநாயகன் படத்தின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை web
சினிமா

ஜனநாயகன் விவகாரம்| இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. தணிக்கை சான்று கிடைக்குமா?

நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது..

Rishan Vengai

விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்று பெறாததால், பொங்கலுக்கு வெளியீடு ஆக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் தணிக்கை சான்று வழங்க உத்தரவிடுமா அல்லது மறுஆய்வுக்கு அனுப்புமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவரது திரை வாழ்க்கையில் கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று திரைக்கு வரவிருந்த நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கை சான்று இறுதிவரை கிடைக்கவில்லை.

குறிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு கடந்த 6ஆம் தேதி தணிக்கை வாரியம் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்துள்ளதாக இமெயில் அனுப்பினர். இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வர முடியாது என அறிந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

ஜனநாயகன்

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா அமர்வு கடந்த 7ஆம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களை கேட்டு கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், 9ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, அம்மனு அன்று மாலையே அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..

அப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ஜனநாயகம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்ததோடு வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனால் விஜய் நடிப்பில் இறுதி படமாக திரைக்கு வர இருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை எனும் சூழல் ஏற்பட்ட நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை கடந்த 10ம் தேதி தாக்கல் செய்தது.

ஜனநாயகன், சென்னை உயர்நீதிமன்றம்

இந்தசூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை அமர்வுக்கு வரவிருக்கிறது. உச்சநீதிமன்றம் தனிநீதிபதியின் உத்தரவு போல் தணிக்கை சான்று வழங்க உத்தரவிடுமா அல்லது படத்தை மறுஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடுமா என்ற குழப்பத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.