vijay pt web
சினிமா

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன?

மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் அரங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

புனிதா பாலாஜி

கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது மட்டுமல்ல, அதன் இசை வெளியீட்டு விழா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எங்கு நிகழ்ச்சி வைத்தாலும், மகிழ்ச்சியாய் வருவோம் என்ற ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும்போதே அதை புரிந்து கொள்ள முடிகிறது.

விஜய் ரசிகர்களின் இந்த ஆர்வம் ஆபத்தாகிவிடக்கூடாது என நினைத்த மலேசிய காவல்துறை, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விழா நடக்கும் இடம் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட அரங்கமாகும். ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால், நிகழ்ச்சி தொடங்கும் தருணத்துக்கு, சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அரங்கத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெரிசல் ஏற்படாமல் ரசிகர்களை பகுதி பகுதியாக பிரித்து வெவ்வேறு நுழைவு வாயில்கள் மூலம் உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

விஜயின் கட்சி கொடி, டீ-சர்ட், துண்டு, கைப்பட்டை, பதாகை என த.வெ.க சார்ந்த எந்த அடையாளங்களும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என திட்டவட்டமாக மலேசியா காவல் துறை தெரிவித்துள்ளது. அரங்கத்துக்குள் வந்தபின் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனவும், 5 வயதுக்குட்ப குழந்தைகளுக்கு அரங்கத்தினுள் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியமான ஒரு கட்டுப்பாடுதான் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது சினிமா விழா என்பதால், விஜய் அரசியல் ரீதியான கருத்துகளை பேசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தனது பட நிகழ்ச்சிகளில் அரசியல் உள்நோக்கத்தோடு விஜய் சொல்லும் குட்டி கதைகளுக்குக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றம் தரக்கூடிய செய்திதான். அரசியல் கட்சியின் தலைவராகி உள்ள விஜயை, கடைசியாக ஒரு முறை ஹீரோவாக நேரில் காண கடல் கடந்து பயணத்திருக்கிறது, அவரின் ரசிகர் கூட்டம்.