சினிமா

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு துவக்கம் - மாஸாக வெளியான புதிய போஸ்டர்

சங்கீதா

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படமும் கலவையான விமர்சனங்களைத் தாண்டி ட்ரோலுக்கு உள்ளானது. இந்த இரண்டுப் படங்களை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ், அடுத்ததாக இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினியை வைத்து ‘தலைவர் 169’ என்றப் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து வந்த விமர்சனங்களால், இந்தப் படம் வெற்றிப்படமாக அமைய படக்குழு மிகுந்த மெனக்கெடல் காட்டி வந்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி படம் குறித்த அறிவிப்பு வெளியாகியும், படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. ‘பீஸ்ட்’ மீதான விமர்சனத்தால் இயக்குநர் நெல்சன் கதையில் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என தலைப்பிட்டு புதிய போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கவுள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.