சினிமா

”தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்” - இயக்குநர்களின் பாராட்டு மழையில் 'ஜெய் பீம்’

sharpana

”சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்” என்று பாராட்டியுள்ளனர் இயக்குநர் பாண்டிராஜ், மாரி செல்வராஜ், ராஜு முருகன், ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்கள்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய்பீம் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சிமலர். சந்துரு, ராஜாகண்ணு, செங்கேணி, பெருமாள்சாமி, மைத்ரா, குருமூர்த்தி, வீராசாமி,மொசக்குட்டி, இருட்டப்பன், பச்சையம்மாள் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை” என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “அவசியமானதை அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யா சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும். ஜெய்பீம் வெல்லட்டும். படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “'ஜெய் பீம்' அநீதிக்கு எதிரான நீதியின் நம்பிக்கை முழக்கம். ஜனநாயகத்தின் கோப்புகளில் கூட குறிக்கப்படாத உயிர்களின் மீது, அவர்களின் துயரங்களின் மீது, நம்பிக்கைகளின் மீது, நமது மனிதத்தின் மீது பெருவெளிச்சம் பாய்ச்சுகிறது. இப்படியான ஒரு படைப்பை அளித்த இயக்குனர் நண்பன் த.செ.ஞானவேலை பெருமிதத்தோடு கட்டி அணைத்து கொள்கிறேன். இப்படியான படைப்பை தயாரித்து நடித்த மக்களுக்கான பெரும் கலைஞன் சூர்யா சாருக்கு வணக்கங்கள். ரத்தமும் சதையுமாய் இதைத் திரைப்படுத்த துணை நின்ற ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கும், இசை நண்பன் ஷான் ரோல்டனுக்கும், பாத்திரங்களாக வாழ்ந்திருக்கும் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் கலை இயக்குனர் கதிர், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

“ஒரு நல்ல திரைப்படம் மனதை மகிழ்விக்கும், சில சமயம் மனசாட்சியை உலுக்கும். அப்படி மனதை உலுக்கிய வலிமையான திரைப்படம் “ஜெய் பீம்”. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாம் காண்பது சினிமா என்பதை மறக்கடித்து, அந்த மனிதர்களின் வாழ்க்கையை அருகே இருந்து பார்ப்பது போல உணர்ச்சிமயமாகிவிட்டது. உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் எளிய மக்களுக்காக போராடும் கம்யூனிச இயக்கத்தின் பங்கை, நீதிக்காக சமரசமின்றி போராடும் நேர்மையான வழக்கறிஞர் “சந்துரு” அவர்கள் பணியை இந்த தலைமுறை அறிய தந்திருப்பதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அதிகாரத்தை கேள்வி கேட்கிற, அதன் முன்னால் மண்டியிடாத எளிய மனிதர்களின் வீரம் படத்தில் பிரகாசிக்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் வைரங்கள். ஒளிப்பதிவும், கலை இயக்கமும் அசத்தல். நடிகர்களின் தேர்வும், அவர்களின் பங்களிப்பும் பிரமாதம். படத்தொகுப்பும் இசையும் கச்சிதமாக இருந்தது. படம் முடிந்தது. மிகச்சிறந்த படம்பார்த்த உணர்வோடு கனத்தமனதுடன் உணர்ச்சிமயமாய் வெளியே வந்தேன். இயக்குனரை பாராட்டும் விதமாக கட்டித்தழுவி, அவர் அருகே நின்றிருந்த, படத்தில் நடித்திருந்த நண்பர் மணிகண்டன் முகத்தை பார்க்கும்போதே அழுகை வந்துவிட்டது. சென்றுமுகம் கழுவிவிட்டு ஆசுவாசப்படுத்திய பின்னரே என்னால் பேச முடிந்தது.

படம் பல விருதுகளை வெல்லும். இது அதிகாரத்தை எதிர்த்து போராடும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும் படைப்பு. சினிமாவும் அதற்கொரு ஆயுதம் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். படத்தை தயாரித்த ஜோதிகா மேடம், சூர்யா சார் இருவருக்கும் பாராட்டுக்கள்" என்று கூறியுள்ளார்.