சினிமா

“ஜெயலலிதாவின் உறவினர்; டிவி குழுமத்தின் உரிமையாளர் என்றார் சுகேஷ்” - நடிகை ஜாக்குலின்!

சங்கீதா

தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தன் வாழ்க்கையை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நரகமாக்கிவிட்டதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்றுதர இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை நோரா உள்ளிட்டோர் பெயரையும் குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் மினி கூப்பர் கார், விலை உயர்ந்த கடிகாரங்கள், ஹேண்ட் பேக், காலணிகள், பூச்செண்டுகள், குதிரை உள்ளிட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசளித்ததாகவும் விசாரணையின் போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் கொடுத்திருக்கிற வாக்குமூலம் டெல்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளநிலையில், அதன் விபரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தனது வாழ்க்கையை சுகேஷ் சந்திரசேகர் நரகமாக்கிவிட்டார் என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும், சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல டிவி குழுமத்தின் உரிமையாளர் என்றும் கூறி சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஏமாற்றிவிட்டார் எனவும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார். தனது மிகப்பெரிய ரசிகர் என்றுக் கூறியதுடன், தென்னிந்தியப் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று சுகேஷ் கூறியதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 

பிரபல டிவி குழுமத்தின் உரிமையாளர் என்பதால், தென்னிந்தியாவில் பலப் படங்களை தயாரிக்க உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து பலப் படங்கள் செய்யலாம் என்றும் அவர் கூறியதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார். சுகேஷ் தன்னை தவறாக வழிநடத்தி தனது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஜாக்குலின், உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது வெகுநாட்கள் கழித்துத்தான் தெரிந்தது என்றும், அவரது குற்றப் பின்னணியை அறிந்தப் பிறகுதான், அவரது உண்மையான பெயர் (சுகேஷ் சந்திரசேகர்) தனக்குத் தெரிந்தது என்றும் ஜாக்குலின் வாக்குமூலம் அளித்துள்ளார்.