பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி, பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது, இயக்குநருக்கு இந்தியில் முதல் படமாகும். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.32 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'ஜாத்' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி, ”முழு கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது" என்று புகார்தாரர் கூறினார். ”கிறிஸ்தவர்கள் கோபப்படவும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கவும், அமைதியின்மை பரவவும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின்போது இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் வேண்டுமென்றே இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்" என்று புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, பாலிவுட் நடிகர்கள் சன்னி தியோல் , ரன்தீப் ஹூடா மற்றும் வினீத் குமார் சிங், படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீதும் ஜலந்தர் காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.