சினிமா

“நான் அவர் இல்லை”- குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஊடகவியலாளர் அமீர் கான்

“நான் அவர் இல்லை”- குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஊடகவியலாளர் அமீர் கான்

JustinDurai

ட்விட்டரில் நடிகர் அமீர் கான் இல்லாத நிலையில், இவ்விஷயம் தெரியாத பலரும், தவறுதலாக அவர் பெயரையே கொண்டுள்ள ஊடகவியலாளரான அமீர் கான் ஐடியை டேக் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர்.  

பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது 57வது பிறந்தநாளை நேற்று முன்தினம் (மார்ச் 14) கொண்டாடினார். அமீர் கானுக்கு, நாடு முழுவதிலுமிருந்து  பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனிடையே ட்விட்டரில் நடிகர் அமீர் கானுக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் அமீர் கான் கடந்த ஆண்டு பிறந்தநாளின் போது ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகக் கூறி, தனது ஐடியை டீ-ஆக்டிவேட் செய்தார். அதன்பின்னர் அமீர்கான் தனது எதிர்கால அப்டேட்கள், பட விவரங்கள் அனைத்தையும் அவரது படத்தயாரிப்பு நிறுவனமான அமீர் கான் புரொடக்‌ஷன்ஸ் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கம் உருவாக்கி பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 14) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடிய அமீர் கானுக்கு, நாடு முழுவதிலுமிருந்து  பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ட்விட்டரில் நடிகர் அமீர் கான் இல்லாத நிலையில், இவ்விஷயம் தெரியாத பலரும் தவறுதலாக அவர் பெயரையே கொண்டுள்ள ஊடகவியலாளரான அமீர் கான் என்பவரது ஐடியை டேக் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர்.  ஊடகவியலாளர் அமீர் கானின் ட்விட்டர் பக்கம் 'ப்ளூ டிக்' கொண்ட ஐடி என்பதால், நடிகர் அமீர்கானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்தான் இதுவென்று நினைத்து பலரும் வாழ்த்துகளை அள்ளி குவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஊடகவியலாளர் அமீர் கான் வெளியிட்ட  ட்விட்டர் பதிவில், ''நடிகர் அமீர் கான் ட்விட்டரில் இல்லை. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி'' எனப் பதிவிட்டு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.