சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜனவரி.25ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக பத்மாவதி திரைப்படம் உருவாகியிருப்பதாக கூறி படத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் பெயர் `பத்மாவத்' என மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி.25ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டிருந்தாலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.