இயக்குநர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘எம்புரான்’. சர்ச்சைக்கு மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தில் 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தை சித்தரிக்கும் காட்சிகளுக்கு பாஜகவினரும் சங் பரிவார் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தப் படத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் படம் வெளியிடப்பட்டது. படம் தொடர்பான சர்ச்சைகளும் பிரச்னைகளும் ஓய்ந்தபாடில்லை என்றாலும் மறுபுறம் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “ ‘எம்புரான்’ படத்தில் வரும் ஒரு சிறு காட்சிகளை வைத்து பாஜக, சங் பரிவார் அமைப்புகள் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். ஆனால். ’எம்புரான்’ கம்யூனிசம் படம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இப்படம் வெளியீட்டின்போது “‘எம்புரான்’ படத்துக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது” என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ’எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அந்தோணி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான சிட்ஃபண்ட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவற்றைத் தொடர்ந்து அந்தோணி பெரும்பாவூருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜக அரசை விமர்சிப்பவரகளை அச்சுறுத்துவதற்காக ‘எம்புரான்’ திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஏவிவிடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அந்தோணி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாகவே இப்போது நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.