தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. மறுபுறம், கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்த ஜோடி பற்றிய செய்திதான் இப்போதைய பரபரப்பாக மாறியிருக்கிறது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். சில வருடங்களாகவே அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பொதுவெளியில் இருவரும் அதபற்றி எந்த உறுதியான தகவலையும் பகிரவில்லை. கடந்த வருடம் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனச் சொல்லப்படுகிறது.
இதுபற்றி சமூக வலைத்தளங்களில் இருவரும் புகைப்படம் எதையும் பகிரவில்லை. ஆனாலும் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் சூழ ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இந்த நிகழ்வு நடந்ததாகச் சொல்கிறது தெலுங்கு மீடியாக்கள். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இவர்களது திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கமிட் செய்து வைத்திருக்கும் படங்கள் முடிவைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றி வெளியாகும் செய்திகளைப் பார்த்து ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.