சினிமா

வாடகைத் தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன், நயன்தாரா? - வெளியான தகவல்

சங்கீதா

திருமணமாகி சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி அறிவித்த நிலையில், இதுதொடர்பான சர்ச்சை வெடித்து வந்தது. இந்நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர்.

இது ஒருபுறம் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்தது குறித்து பல்வேறு சர்ச்சை கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக வாடகைத் தாய் விதிமுறைகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி பின்பற்றினார்களா? என சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களும் நிலவியது.

இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்காக மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் ஆதாரங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும், அது தங்களை பாதிக்காது எனவும் அவர்கள் விளக்கம் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும். அதுவரை பொறுமையாய், நன்றியுடன் இருங்கள்” என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்த நிலையில் இவ்வாறு தகவல்கள் வெளிவந்துள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.