சினிமா

'முதல்நாள் 11 மணிநேரத்திற்கு மேல் நீடித்த விசாரணை'-நடிகர் திலீப் 2ஆவது நாளாக போலீசில் ஆஜர்

Sinekadhara

நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பான புகார் குறித்து கேரள நடிகர் திலீப்பிடம் கொச்சி காவல்துறையினர் 2ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டில் முன்னணி நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் உட்பட பத்து பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் அதிகாரியை தாக்க நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக ஆடியோ ஒன்று வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் திலீப் அவரது சகோதரர் சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதாக வாய்ப்பு இருப்பதால் திலீப் உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திலீப்பின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டது.

எனினும் அவர் ஜனவரி 23, 24 மற்றும் 25ஆம் தேதி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து திலீப் உள்ளிட்டோர் கொச்சி குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். திரைப்பட இயக்குநர் பாலசந்திரகுமார் தம்மை அச்சுறுத்தியதாக காவல்துறை விசாரணையில் திலீப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நீடித்த நிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜராகியுள்ளார்.