சினிமா

இளையராஜா இசையமைக்கும் 1422 -வது படம் : சர்வதேச அளவில் இந்திய - ஆங்கில மொழிகளில் உருவாகிறது

சங்கீதா

இளையராஜா இசையமைக்கும் 1422-வது படமாக ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ இந்திய - ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ளது. சுவாரஸ்யத்தை உருவாக்கும் விதத்தில், இன்று 14.02.2022 காதலர் தினத்தில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையாராஜா இசை என்றாலே, அது பல தலைமுறைகளை தாண்டியும் இன்றளவும் ரசிகர்களை ஈர்ப்பதாகவே உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் திரையுலகில் இசையமைக்க துவங்கிய இளையராஜா, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 9 மொழிகளில், 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், காதலர் தினமான, அதாவது 14.02.2022 இன்று, இளையராஜாவின் 1422-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகி வரும் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்ற படத்திற்கு இளையராஜா இசைமையக்கிறார். ‘வாசு நாங்க பக்கா கமர்ஷியல்’ என்ற கன்னடப் படத்தை இயக்கிய அஜித் வாசன் உஜ்ஜினா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும், 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

கிரிஷ் கதாநாயகனாகவும், மாட்டில்டா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். லண்டனில் இருந்து இந்தியா வரும் காதலர்கள், இங்கு சில நாள்கள் வாழ்ந்தப்பிறகு பிரிந்து விடலாம் என்று நினைக்கின்றனர். அப்போது அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பேய்களுடன், காதலர்கள் பேசியப் பின்னர், மீண்டும் இணையலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அதன்பிறகு காதலர்கள் இணைந்தர்களா, இல்லையா என்ற கதைக்களத்தைக் கொண்டு, இந்த இரு கதாபாத்திரங்களை வைத்து மட்டுமே, காதல், திகில் கலந்து கதை நகர்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.