gondhal gondhal
சினிமா

99th Oscars| அடுத்த கட்டம் சென்ற இந்தியாவின் ’கோந்தல்’.. இசைப்பிரிவில் இளையராஜா?

ஆஸ்கர் விருதுக்கான இறுதித் தகுதிப்பட்டியல் வரை இந்தியாவின் கோந்தல் திரைப்படம் முன்னேறியுள்ளது.

Johnson

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட மராத்தி திரைப்படமான 'கோந்தல்' (Gondhal), 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சர்வதேசத் திரைப்படப் பிரிவின் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மற்றொரு முக்கியமான படி முன்னேறியுள்ளது.

திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி (Academy of Motion Picture Arts and Sciences) நவம்பர் 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, சர்வதேசத் திரைப்படப் பிரிவில் மொத்தம் 104 திரைப்படங்கள் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் 100 திரைப்படங்கள் அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்புகள் மூலமாகவும், நான்கு திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பெற்ற விருதுகளின் அடிப்படையிலும் தகுதி பெற்றுள்ளன. மேலும், இந்தியாவைச் சேர்ந்த நாகாலாந்து பின்னணியில் உருவான 'Angh' திரைப்படமும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF) Platform விருதை வென்றதன் மூலம் இப்படம் தகுதி பெற்றுள்ளது.

இயக்குநர் சந்தோஷ் டாவகார் (Santosh Davakhar) இயக்கியுள்ள 'கோந்தல்' திரைப்படம், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் தேர்வாக அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மகாராஷ்டிராவின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், அங்குள்ள பாரம்பரியமான கோந்தல் சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு ஒரு திருமண வீட்டில் நடக்கும் விஷயங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் நடைபெறும் கதையாக அமைந்துள்ள இப்படத்தில், சுமன் என்ற பெண் தனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்புவதும், கோந்தல் கலைஞரான சாஹேபாவுடன் காதலில் விழுவதும் கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனால் உருவாகும் சூழல்கள், கொலை, துரோகம், ஆசை மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் எனத் திரில்லர் பாணியில் கதை நகர்கிறது. இஷிதா தேஷ்முக், கிஷோர் கடம், யோகேஷ் சோஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆஸ்கரில் இந்தியாவின் அடுத்தக் கட்டம்!

சரி இந்த ஆஸ்கர் தகுதி பட்டியல் அதாவது Eligible list என்றால் என்ன? ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் ஒரு திரைப்படம் இடம்பெறுவது, அந்தப் படம் குறிப்பிட்ட விருதுப் பிரிவில் அடுத்தகட்டத் தேர்வுக்குப் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது என்பதைக் குறிக்கிறது. அதாவது உலகம் முழுக்க International Feature Film என்ற சர்வதேசத் திரைப்படப் பிரிவில் பெறப்பட்ட படங்களில் இருந்து ஆஸ்கர் போட்டிக்கு எந்தெந்த படங்கள் தகுதி வாய்ந்தவை பரிசோதிக்கப்படும். இதில் படத்தின் நீளம், படம் 50 சதவீதமாவது ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் இருக்க வேண்டும், திரையரங்க வெளியீட்டுக்கு முன் ஓடிடியில் வெளியாகி இருக்கக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகள் உண்டு.

இதற்கு முன் இந்தியாவில் இருந்து பல படங்கள் ஆஸ்கரின் International Feature Film பிரிவின் கீழ் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழில் இருந்து தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹேராம், விசாரணை, கூழாங்கல் ஆகிய தமிழ்ப்படங்களை அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் அத்தனை படங்களுமே ஆஸ்கர் தகுதி பட்டியலில் இடம்பெற்றவையே.

gondhal

அதேநேரம் இந்த தகுதிப்பட்டியலில் இடம்பெறுவது என்பது, ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டதாக அர்த்தமல்ல. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள 104 திரைப்படங்களில் இருந்து டிசம்பர் 15, 2026 அன்று 15 திரைப்படங்கள் கொண்ட இறுதிக்கட்டத் தேர்வுப் பட்டியல் (Shortlist) அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படங்களால் Shortlist வரை சென்ற படங்கள் 2022ல் அனுப்பப்பட்ட Last Film Show என்ற குஜராத்தி படமும், கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட Homebound என்ற இந்திப்படமும் மட்டுமே.

Shortlist பட்டியலுக்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்று, ஜனவரி 21, 2027 அன்று ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரைகள் அறிவிக்கப்படும். இறுதிப்பரிந்துரை எனப்படும் ஐந்து படங்கள் அடங்கிய Nomination பட்டியலை Mother India, Salaam Bombay!, Lagaan ஆகிய படங்கள் மட்டுமே தொட்டுள்ளன. 'கோந்தல்' படம் Shortlist, Nomination list ஆகியவற்றை கடந்து இந்தியாவுக்கு ஆஸ்கர் பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் 'கோந்தல்' படத்தை இசைப் பிரிவிலும் ஆஸ்கரில் சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் சந்தோஷ். இப்படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் ஆஸ்கர் பயணம் எப்படி அமைய இருக்கிறது என்பதையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 99-வது ஆஸ்கர் விருது விழா 2027 மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது.