ஆரம்ப காலங்களில் பாலிவுட் திரையுலகில் தனிப்பட்ட முறையில் நிறைய போராட்டங்களை சந்தித்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
2000-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு திரையுலகில் கால்பதித்த அவர், இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். அதன்பின்னர் ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், நீண்ட நாட்கள் கழித்து, 'ஒயிட் டைகர்' என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வில் பாலிவுட் திரையுலகில் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டம் குறித்தும், ஓடிடி தளங்களின் வரவு குறித்தும் பேசியிருக்கிறார். அதில்,“ ஒரு நடிகராக தனிப்பட்ட முறையில் பாலிவுட் திரையுலகில் நான் நிறைய போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். இந்திய சினிமா துறை ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. ஆனால், ஓடிடி எனப்படும் ஸ்ட்ரீமிங் தளங்கள் இதனை உடைத்து இந்திய சினிமா துறையை ஜனநாயகமயமாக்கியுள்ளன. மேலும், திறமையுள்ள பல புதிய கலைஞர்களை காக்கும் வகையில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இந்த தளங்கள்.
இதுமட்டுமில்லாமல், புத்தம் புதிய கதைகள் மற்றும் புதுவித யோசனைகளுக்கு கதவுகளை திறந்துள்ள ஓடிடி இயங்குதளங்களால் தற்போது நல்ல கதைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஸ்ட்ரீமிங் சேவைகள் வழங்கியுள்ள வசதி காரணமாக, இந்திய சினிமா தனது ஃபேவரைட் ஐந்து பாடல்கள் மற்றும் 4 சண்டைக் காட்சி ஃபார்முலாவில் இருந்து மாறிவருகிறது.
இப்போதுள்ளவர்கள் சிறந்த கதைகளை, உண்மை கதைகளை சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஓடிடி தளங்களால் பல ஆண்டுகளாக ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய சினிமா உலகில் தற்போது புதிய எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். இது ஆச்சரியம் தரும் விஷயம்.
ஓடிடி தளங்கள் இதுபோன்ற காரணங்களால் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்கும் உற்சாகத்திற்கு எதுவும் ஈடாக முடியாது. பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால், தியேட்டர்கள் திறந்தவுடன் நிச்சயம் மீண்டும் அங்கு செல்வேன். ஓடிடி தளங்கள் வருகையால் தியேட்டர்கள் பாதிப்படையும் என நினைக்கவில்லை. ஆனால், ஸ்ட்ரீமிங் அல்லது ஓடிடி தளங்கள் வழங்கிய வசதியால், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிகிறது. மேலும் உலகின் பல்வேறு கலாசாரத்தை மக்களிடம் எளிதாக பரப்புகிறது மற்றும் மக்களுக்கு கல்வி கற்பிக்கிறது என்பதால் இதன் வருகை ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
ஸ்ட்ரீமிங் தளங்களை வரவேற்க, தழுவுவதற்கான சரியான நேரம் இது. ஆனால், இதுவே எதிர்காலம் அல்ல. அதேநேரம் இது நிகழ்கால தேவை. பாலிவுட்டை தாண்டி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வெளியாகும் மாநில மொழி திரைப்படங்கள் அமெரிக்காவிலும் சீனாவிலும் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தெற்காசிய சமூகங்களிடம் தங்களது சொந்த கதைகளை திரையில் காணவும், தங்களை உலக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தவும் மிகப்பெரிய அளவில் விரும்புவதால் இது சாத்தியப்பட்டுள்ளது. இந்த விருப்பத்தால் தெற்காசிய சினிமா மற்றும் கலைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உலக அளவில் உருவாக்க முடியும்" என்று விரிவாக பேசியுள்ளார் பிரியங்கா சோப்ரா.