விபத்தில் இருந்து சரியான நேரத்தில் தப்பித்தேன் என்று ‘இந்தியன்2’ பட நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் ‘இந்தியன்2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றி வந்த சங்கரின் உதவியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ”மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைப் பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தனது மனநிலையை இப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் அவர், “நேற்றிரவு முதல் எதிர்பாராமல் நடந்த விபத்தில் என்னுடன் வேலை செய்த சக ஊழியர்கள் மரணமடைந்ததனர். அந்த இழப்பால் அடைந்த மன வேதனையை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது ஆகியோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வலியையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தத் துயரமான தருணத்தில் கடவுள் அவர்களுக்கு தைரியத்தை தருகிறார் எனக்கூறியுள்ளார்.
மேலும் அவர் உயிருடன் இருக்கவும், இந்த ட்வீட்டைத் தட்டச்சு செய்யவும் ஒரு நொடிக்கு ஒரு பகுதியே தேவைப்பட்டது என விபத்தின் போது நடந்த பதற்றமான சூழலைப் புரிய வைத்துள்ளார். தான் விபத்திலிருந்து சரியான நேரத்தில் தப்பித்தேன் என்றும் ஆனால் இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறேன்.வாழ்வின் மதிப்பையும் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.