இசைக் கலைஞர்களின் உலகத்திற்குள் சஞ்சரிக்க வேண்டும் எனும் பேரார்வம் எல்லா ரசிகர்களுக்குள்ளும் நிச்சயம் இருக்கும். அப்படியான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம்.
உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் 'கான்சர்ட்' திரைப்படம் 'திஸ் இஸ் இட்'. உலகம் முழுக்க பல்வேறு மேடைகளில் அவர் நிகழ்த்திய இசை ஜாலங்கள், அவர் ஆற்றிய உரை என இப்படம் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை கொண்டது. 'திஸ் இஸ் இட்' பாணியிலேயே உருவாகியிருக்கிறது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம்.
இந்தியாவின் முதல் மியூசிக் கான்சர்ட் படம் எனும் பெருமையோடு உருவாகியிருக்கும் 'ஒன் ஹார்ட்', ஏ.ஆர். ரஹ்மானின் இசை அனுபவங்கள், வாழ்க்கைக் குறித்த அவரது புரிதல், ரஹ்மானோடு பணியாற்றிய இசை கலைஞர்களின் அனுபவப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒன் ஹார்ட்' தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கிறது. பார்வையாளர்கள் இசைக் கலைஞர்களின் உலகை உணரும் வகையிலான கதையோட்டத்துடன் தயாராகியுள்ள இப்படம் ஆத்மார்த்தமானதாக இருக்கும் என சொல்லியிருக்கிறார் 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான்.