சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் பிகில் படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதனிடையே, நெய்வேலியில் நடைபெற்று வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த விஜய்யிடம் அவர்கள் சம்மன் அளித்து விசாரணை நடத்தினர். அப்போது பிகில் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? எதன் அடிப்படையில் அவ்வளவு சம்பளம்? என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது.
இதற்கு பதிலளித்த விஜய்யை அங்கிருந்து அவரது காரிலேயே வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. விஜயை படப்பிடிப்பிற்கே சென்று விசாரணை நடத்தியதோடு அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.