சினிமா

“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

PT

தனது வாழ்வில் பாலியல் துன்பறுத்தல்கள் முதல் வசை சொற்கள் வரை என  பலவற்றைச் சந்தித்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் “அவர்களும் இவர்களும்” படம் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் “காக்கா முட்டை” “பண்ணையாரும் பத்மினியும்” படங்கள் மூலமாக கவனம் ஈர்த்து இன்று தெலுங்கு, மலையாளம்,  என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், தனது வாழ்க்கைக் கதையை பகிர்ந்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “ நான் ஒரு ஹவுசிங் போர்டில் வாழும் ஒரு குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடன் பிறந்த நான்கு நபர்களில் நான் மட்டுமே பெண். சரியாக எனக்கு எட்டு வயது இருக்கும்போது எனது அப்பா இறந்தார். எனது தாய்க்கும் பெரிதாக படிப்பறிவு  கிடையாது. ஹிந்தி, ஆங்கிலம் போன்ற எந்த மொழிகளும் தெரியாது. இருப்பினும் குடும்பத்தைக் காப்பற்ற மும்பைச் சென்று அங்கு துணிகளை வாங்கி வந்து, சென்னையில் உள்ள எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பார்.

காலப்போக்கில் எல்.ஐ.சி ஏஜெண்டாக வேலை செய்தார். அதன் பின்னர் ரியஸ் எஸ்டேட் தரகராக வேலை செய்தார். அவ்வாறுதான் எங்களை வளர்த்தார். இன்றும் கூட எல்.ஐ.சி பாலிசிகள் எடுக்க என்னோடு நடிக்கும் நடிகர்களிடம் கேட்டுப் பார்ப்பார். எனது சகோதரனுக்கு 12 வயது இருக்கும்போது அவர் இறந்தார். அவர் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. எனது இரண்டாவது சகோதரனும் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தான். பிள்ளைகளின் தொடர் உயிரிழப்புகள் எனது தாயை முடக்கிப்போட்டு விட்டது. இதனால் மிக இளம் வயதிலேயே குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது.

அதனால் சிறு வயதிலேயே தெருவில் இறங்கி வேலை செய்யத் துவங்கினேன். எனது முதல் வேலை என்னத் தெரியுமா..? ஒரு தனியார் சாக்லேட்டை தெருவில் நின்று விளம்பரப்படுத்த வேண்டும். அந்த வேலையை நான் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பார்த்தேன். அதன் பின்னர் ஒரு பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமடைந்தேன். அதனையடுத்து சின்னத்திரையில் கவனம் செலுத்தினேன். ஆனால் சின்னத் திரையுலும் கூட திரைத்துறை பின்னணி இருந்தால்தான் நல்ல சம்பளம் தருகிறார்கள். அதனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.
எனது தோல் நிறத்துக்காகவும், பிற மொழிகளில் புலமை இல்லாததாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அதன் பின்னர் படிப்படியாக படங்களை கவனமாக தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அட்டக்கத்தி எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதன் பின்னர் பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை என எனது சினிமா வாழ்வு விரியத் தொடங்கியது. இந்த கரடு முரடனான பாதையில் பாலியல் துன்புறுத்தலுக்கும், கடுமையான வசைச் சொற்களுக்கும் நான் ஆளாக்கப்பட்டிருக்கிறேன். இருப்பினும் நான் போராடினேன். இப்பொழுதும் போராடுகிறேன்”என்றார்.