சினிமா

இளையராஜாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழா‌ரம்

webteam

மக்கள் இந்தி‌‌ பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை‌ ராயப்பேட்டையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டுமென, தயாரிப்பாளர் சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்‌றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இசைநிகழ்ச்சிக்கு எதிராக ‌கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்து, நாடே உற்றுநோக்கும் மாபெரும் கலைஞனை அவமதித்துவிட்டதாக மனுதாரர் தரப்பை நீதிபதிகள் சாடினர். ‌
தமிழகத்தில்தான் எந்த நிகழ்வாக இருந்தாலும் கடைசி நேரத்தில் தடை கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இசை நிகழ்ச்சியை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க உத்தரவிட முடியாது‌‌ என மறுப்பு தெரிவித்தனர். 

மேலும்‌, இளையராஜா இசைநிகழ்ச்சி தொடர்பாக லாப, நஷ்ட கணக்குகளை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.