பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதில் "பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோட முடிந்துபோவதும் அல்ல சினிமாவோடு தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடைக் கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நம் வாழ்வாகவும் வாழ்வுக்கு ஆதாரமாகவும் இருந்தது. இசையில் ஸ்வரங்களை விட்டு பிரியாமல் இருக்கிறதோ அதேபோல நம் நடப்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை" என்றார்.
மேலும் "நாம் சண்டை போட்டாலும் போடவில்லை என்றாலும் நம் நட்பு எப்போதும் பிரிந்தது இல்லை அது உனக்கும் எனக்கும் தெரியும். நான் உனக்காக பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயம் மீண்டு வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிச்சயம் நடக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா" என உருக்கமாக பதிவிட்டுள்ளார் இளையராஜா.