சினிமா

“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம்

“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம்

webteam

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இளையராஜா தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மீண்டும் ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அவரது இறுதி சடங்கில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை. நயன்தாராவும், விக்ரமும் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா, தான் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாகக் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ் பெருங்குடி மக்களே! நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம்? எப்படி நாம் திரும்பி வரப் போகிறோம் என்பது தெரியவில்லை.

அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே சுத்தமான தமிழ் வசனங்களை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய கலைஞர், கடைசி வசனகர்த்தா கலைஞர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும் கலையாகட்டும் தமிழாகட்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையில் ‘ஈடு’ என்ற வார்த்தைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே அவர்.  இந்தத் தினத்தில் ஆஸ்திரேலியாவில் எனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது. எனவே அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.