இளையராஜா web
சினிமா

”இசையிலேயே கவனம் இருந்ததால் குழந்தைகளை விட்டுவிட்டேன்..” - பவதாரிணி நினைவுநாளில் இளையராஜா உருக்கம்

மகள் பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Rishan Vengai

திரையிசை வாயிலாக உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள இசைஞானி இளையராஜா, தனி இசை வடிவங்களை உருவாக்குவதிலும் எப்போதும் ஆர்வம் உடையவர். அந்தவகையில், இசைஞானி இளையாராஜா தன்னுடைய சிம்பொனி 1-ஐ ஜனவரி 26-ம் வெளியிடுவதாக கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

அதுகுறித்த அறிவிப்பில், “லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “எப்போதும் இசை இசையென்றே தன்னுடைய ஆன்மாவை அர்ப்பணித்த இளையராஜா, தன்னுடைய மகள் பவதாரிணியின் முதலாமாண்டு நினைவுநாளில் இசை இசையென இருந்ததால் என்னுடைய குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.

இசையிலேயே கவனம் இருந்ததால்.. வேதனையாக கூறிய இளையராஜா!

இளையாராஜாவின் மகள் பவதாரிணி கடந்தாண்டு ஜனவரி 25-ம் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி 47 வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்றுடன் அவர் மறைந்து ஒராண்டாகும் நிலையில் இளையராஜா உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மகள் பவதாரிணியின் திதியன்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருப்பதாகவும், அதில் இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில், ”என் அருமை மகள் பவதாரிணி எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பின்னால்தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

காரணம், என்னுடைய கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என்னுடைய குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது.

அந்த வேதனைதான் மக்களை எல்லாம் ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

பவதாரிணியின் பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதி அன்று அவருடைய திதி வருகிறது. அவை இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்று இருக்கிறோம். இதில், இசை கலைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய மகள் பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பேசியுள்ளார்.