சினிமா

இளையராஜாவின் 'உலகம்மை' பின்னணி இசையை வெளியிட்ட பாக்யராஜ்!

sharpana

இளையராஜா இசையில் கெளரி கிஷன் நடிக்கும் ‘உலகம்மை’ திரைப்படத்தின் பின்னணி இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நாவலை தழுவி திரைப்படங்களை உருவாக்கும் போக்கும் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ’ஊருக்குள் ஒரு புரட்சி’, ’வேரில் பழுத்த பலா’ போன்ற முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் தமிழ் உலகிற்கு அளித்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ’ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலை தழுவி ’உலகம்மை’ திரைப்படம் உருவாகிறது.

நாவலின் மையமான பெண் கதாபாத்திரமான ’உலகம்மை’ என்ற பெயரிலே இந்தப் படம் உருவாகிறது. கெளரி கிஷன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ’காதல் எஃப்.எம்', 'குச்சி ஐஸ்' உள்ளிட்டப் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இயக்கியுள்ளார். மித்ரன் நாயகனாக நடித்துள்ளார்.மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும், வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர். பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இயக்குநர் விஜய் பிரகாஷ் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலத்திலிருந்தே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

"அதுவும் 'ஒரு கோட்டுக்கு வெளியே' எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன். சமுத்திரம் அவர்கள் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்” என்கிறார் உற்சாகமுடன்.