பாலிவுட்டில் தனது வெற்றிப்படத்தைக் கொடுப்பது முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் சோனு சூட். 2002ஆம் ஆண்டு ஷாஹீத் - இ - அசாம் படத்தின்மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். நேற்று தனது 47வது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். நேற்று பிரபல பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், முதன்முறையாக மும்பைக்கு வந்தபோது கொண்டாடிய பிறந்தநாளை நினைவுகூர்ந்தார். சினிமாவில் நடிக்கும் கனவுடன் முதன்முறையாக மும்பைக்கு வந்தபோது இங்கு அவருக்கு நண்பர்கள் யாரும் இல்லை என அவர் கூறினார்.
1997 அல்லது 98இல் நான் முதன்முறையாக மும்பைக்கு ஜூலை 25 அல்லது 26ஆம் தேதியில் வந்து இறங்கினேன். 30தேதி என்னுடைய பிறந்தநாள். ஆனால் இங்கு எனக்கு யாரையும் தெரியாது. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லக்கூட ஒருவரும் இல்லை. நள்ளிரவில் லோகன்வாலா பாலத்தின் மீது நான் அமர்ந்திருந்தேன். இரவு 12 மணிக்கு எனது அப்பா, அம்மா மற்றும் சகோதரி போனில் வாழ்த்தினார்கள். அங்கு யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா என கேட்டார்கள். எனக்கு இங்கு யாரும் இல்லை என கூறினேன். அப்போது நான் தனியாக இருப்பதாக உணர்ந்தேன். அதை நினைத்து என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்த சிட்டி மிகப்பெரியது. ஆனால் ஒருவர் கூட வாழ்த்துச்சொல்ல இல்லை.
அந்த நாள் கடின உழைப்பைக் கற்றுக்கொண்டேன். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தில் பலரும் என் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.இதுவே என்னுடைய பயணத்தின் சிறப்பு. என்னை விரும்புவதற்கு யாரும் இல்லாத அந்த நாளை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன் என அவர் மும்பையில் கொண்டாடிய தனது முதல் பிறந்தநாளை நினைவுகூர்ந்தார்.
இந்த கொரோனா சமூக பரவல் காலகட்டத்தில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார். வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.