’ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’துப்பாக்கி’ படத்தில் நான்தான் ஹீரோயினாக நடித்திருக்க வேண்டும்’ என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ’ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். படம் பற்றி அவர் பேசும்போது, ’தமிழில், ’என்னமோ ஏதோ’ படத்தில் அறிமுகமானேன். பிறகு தெலுங்குக்கு சென்றுவிட்டேன். தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். ’ஸ்பைடர்’ படம் தமிழ், தெலுங்கில் உருவாவது மகிழ்ச்சி. இதன் படப்பிடிப்பில் முதலில் தமிழுக்கான காட்சிகள் எடுக்கப்படும். பிறகு தெலுங்குக்காக எடுப்பார்கள். எனக்கு இதன் படப்பிடிப்பில் சிக்கலாக இருந்த விஷயம் நடனம்தான். அர்த்தம் புரிந்துகொண்டு எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டும் என்பதால் கடினமாக இருந்தது. இருந்தாலும் இந்தப் படத்தில் எனக்கு சரியான இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் இயக்கிய ’துப்பாக்கி’ படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டும். அப்போது ஒரு விளம்பர படத்தில் என்னைப் பார்த்துவிட்டு விசாரித்திருக்கிறார் முருகதாஸ்.
ஆனால், என்னை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதோடு, நான் படிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது. எப்படியோ இப்போது அவர் இயக்கத்தில் நடித்துவிட்டேன். எனக்குப் பிடித்த இயக்குனர்களான மணிரத்னம், ராஜமவுலி வரிசையில் முருகதாஸூம் இருக்கிறார்’ என்றார்.