நடிகை ஜெனிலியா கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின், வேலாயுதம், ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், அவர் தற்போது கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளப் பதிவில் “ எனக்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனாத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் தொற்றுக் குறித்தான எந்த அறிகுறிகளும் இல்லாததால் நான் கடந்த 21 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். இந்தக் காலம் உண்மையில் எனக்கு மிகச் சவாலாகவே இருந்தது. எனக்கு இருந்த ஆசீர்வாதங்களே கொரோனாவுக்கு எதிரானப் போரை எளிதாகக் கடக்க உதவியது. இறுதியாக இன்று நான் செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என்று வந்தது. எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்களைச் சுற்றியுள்ள அன்பு, அதுதான் உண்மையான பலம்.
விரைவான பரிசோதனை, நல்ல உணவு பழக்க வழக்கம், உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்தல் உள்ளிட்டவையே இந்த கொரோனா என்ற அசுரனை வெல்ல ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளார்.