சினிமா

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி!

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி!

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக்க அனுமதி தரமாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கை கதையை மூன்று பேர் இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

(ஆதித்யா பரத்வாஜூடன் பாரதிராஜா)

முதலில் விஜய் இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலர் போட்டி போடுகின்றனர். 

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் ’சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இவர் ஒய்-ஸ்டார் சினி மற்றும் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுபற்றி ஆதித்யா பரத்வாஜ் கூறும்போது, ’படத்துக்கு தற்காலிகமாக, ’புரட்சித் தலைவி’ என்று டைட்டில் வைத்திருக்கிறோம். சிலர் ’அம்மா’ என்பதை சேர்க்குமாறு கூறியுள்ளனர். இசையமைக்க இளையராஜாவிடம் பேசியிருக்கிறோம். டிசம்பரில் படத்தை தொடங்க இருக்கிறோம். படத்தில் சசிகலா, எம்.ஜி.ஆர் கேரக்டர்களும் வருகிறது. எம்.ஜி.ஆராக நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன்லாலிடம் பேசி வருகிறோம்’ என்றார்.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை கதையை எடுப்பதற்கு அனுமதி தரமாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க, அவரின் வாரிசுகளான என்னிடமோ, தீபக்கிடமோதான் அனுமதி வாங்கவேண்டும். அப்போதுதான் அவரின் உண்மையான வரலாறு கிடைக்கும். ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதை நான் வரவேற்கமாட்டேன். ஏனென்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதுபற்றி விசாரணை நடந்துவருகிறது. ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரை சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரின் வாழ்க்கையை படமாக எடுத்தால் எந்தளவுக்கு அவரைப் பற்றி ய உண்மைகள் வெளிவரும்? அதனால் இந்த நேரத்தில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க நான் அனுமதி தரமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.