குழந்தை நட்சத்திரமாக நடித்து `தெய்வத்திருமகள்' படம் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சாரா அர்ஜுன். மணிரத்னம் இயக்கிய `பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் வயது நந்தினியாகவும், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான `துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் உடன் ஜோடியாக நடித்து ஹீரோயினாகவும் அறிமுகமானார். தற்போது இவர் தெலுங்கில் நடித்துள்ள படம் `Euphoria'. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழில் விஜய் நடித்த `கில்லி' படத்தின் ஒரிஜினல் படமான `ஒக்கடு' படத்தை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய சாரா அர்ஜுன் "நிறைய காலத்துக்கு பிறகு தெலுங்கு ரசிகர்கள் முன்பு நிற்பதில் மகிழ்ச்சி. இங்கே உள்ள வரவேற்கும் கலாச்சாரமும், கதைகளை கொண்டாடுவதும் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். நான் எப்போதும் உங்களை பெருமைப்படுத்தவே உழைக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் நன்றி. இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த குணசேகர் சாருக்கு நன்றி. ஒரு குடும்பமாக இணைந்து இப்படத்தில் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. இது முக்கியமான கதை, அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
"`துரந்தர்' படத்துக்கு பிறகு பெரிய ரசிகர் பட்டாளம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இப்போது நீங்கள் டோலிவுட்வந்திருப்பதால் கேட்கிறேன். இங்கு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?" எனக் கேட்கப்பட, "எனக்கு பலரையும் பிடிக்கும். ஆனால் இப்போது சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விஜய் தேவரகொண்டா ரொம்ப பிடிக்கும்" என்றார் சாரா அர்ஜுன்.