பாஜகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் வரலட்சுமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னையிலுள்ள வரலட்சுமி இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். பாஜகவினருடன் வரலட்சுமி சந்தித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில், தான் பாஜகவில் சேரவில்லை என்று வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வரலட்சுமி தனது ட்விட்டரில், “முரளிதரராவ் உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். நமது கருத்துக்களை பிரதமர் அறிந்து கொள்ள விரும்புவது நல்ல விஷயம். என்னை பற்றிய வதந்திகள் எல்லாம் ஆதரமற்றது. நான் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் சேரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வரு, ஏற்கெனவே ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார்.
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நோக்கும் ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தை பாஜக மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாஜக தலைவர்கள் முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரபலங்களை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தின்படி பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் சென்னையில் பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்தார். அந்த வகையில்தான் வரலட்சுமியையும் சந்தித்து மோடி அரசின் சாதனைகள் குறித்த கையேட்டை முரளிதர ராவ் வழங்கினார். மேலும், மோடி அரசின் சாதனைகளையும் வரலட்சுமியிடம் விளக்கினார்.