சினிமா

‘சூரரைப் போற்று என்னுடைய உண்மைக்கதை இல்லையா?’ - விமர்சனங்களுக்கு கோபிநாத் ‘நச்’ விளக்கம்

webteam

ஜி.ஆர். கோபிநாத் சூரரைப் போற்று படம் குறித்த சில கருத்துக்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நவம்பர் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று படம் குறித்த விவாதங்கள் இன்றும் ஓய்ந்த பாடில்லை. மக்களை கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படம் என்ற வகையில் நிச்சயம் சூரரைப் போற்று திரைப்படம் வெற்றிவாகை சூடிவிட்டது. அதில் சந்தேகமேயில்லை. திரையரங்குகளில் வெளியிட்டிருந்தாலும் நிச்சயம் ஹிட் அடித்திருக்கும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் விவாதம் சூரரைப்போற்று கதை அம்சம் குறித்தது. கதையின் உண்மை தன்மை குறித்தது.

ஏர்.டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர். கோபிநாத் எழுதிய சிம்பிலி பிளை நூலினை மையமாக கொண்டே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தது. சிம்பிலி ப்ளை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்தான் சூரரைப்போற்று படத்திலும் இடம்பெற்றுள்ளதா என்று பலரும் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். வேறுயார் விமர்சனங்களை முன் வைத்தாலும் பரவாயில்லை, கோபிநாத்தின் நண்பர்களே இத்தகைய விமர்சனங்களை அவரிடமே வைத்துள்ளார். அதனால், கோபிநாத்தே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதுதொடர்பான விமர்சனங்களுக்கு மிக விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

ஜி.ஆர். கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது “ என்னுடைய சில பள்ளி நண்பர்கள், ராணுவ வீரர்கள், ஏர்.டெக்கான் ஊழியர்களுக்கு சூரரைப் போற்று படமானது உண்மைக்கதையில் இருந்து விலகி நிற்பதாக தோன்றியது. அவர்களிடம் உண்மைக்கதையானது சினிமாத் திரைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது என நான் எடுத்துரைத்தேன்.

முற்றிலுமாக உண்மைக்கதையை படமாக்கியிருந்தால் படமானது ஒரு ஆவணப்படமாக மாறியிருக்கும். இதுவும் மதிப்பு மிக்கதுதான். ஆனால் இதன் மதிப்பு வேறுவகையிலானது. நாயகன் துணிச்சல்மிக்கவர். ஆனால் அவர் பாதிக்கப்பட கூடியவர். அவர் வெற்றியடைய அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரினர் உதவித் தேவைப்படுகிறது. அவரது குழுவில் உள்ளவர்கள் நாயகனை விட அதிக தியாகத்தை செய்கின்றனர்.

மனைவியானவள் தன்னுடைய கனவினை கைவிடாமலே நாயகனின் கனவிற்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் நாயகனுக்கு உறுதுணையாக இருக்கும் அதே நேரத்தில், அவருக்கு அடிபணியாமல் தனது அடையாளம், சுய மரியாதையை இழக்காமல் இருக்கிறார். அபர்ணாவை அப்படியாகத்தான் சித்தரித்துள்ளார் இயக்குநர் சுதா. இது உண்மைக்கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. நான் தோல்வி அடைந்திருக்கிறேன். ஆனால் தோல்வியாளனாக இருந்ததில்லை.

நான் எனது செயல்களை நிறுத்தும் போதுதான் தோல்வியாளனாக மாறுவேன். ஒவ்வொரு முறை நான் கீழே விழும் போதும் எழுந்து நின்றிருக்கிறேன். இது விடாமுயற்சி பற்றியது மட்டுமல்ல. இங்கு நம்புவதற்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியும், சூரியன் உதிக்கும் போது கதவுகள் திறக்கப்படும் என்பதை பற்றியுமாக இருக்கிறது. இதுதான் படம் சொல்ல வந்த உண்மையான செய்தி. இதை சூர்யா மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்”என்று பதிவிட்டுள்ளார்.

கோபிநாத்தின் இந்த விளக்கமானது ஒருவகையில் சூரரைப் போற்று கதை தொடர்பான விமர்சனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி முற்போக பேசுபவர்கள் கூட இரண்டு தரப்பாக பிரிந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மணிரத்னம் குரு படத்தில் செய்த தவறைப் போல் தான் சுதா கொங்கராவும் சூரரைப் போற்று படத்தில் செய்துள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். எல்லோருக்கும் விமானப் பயணத்தை உறுதி செய்ய துடிக்கும் ஒரு கதையை நிச்சயம் கொண்டாடியே ஆக வேண்டும் என ஒரு தரப்பினும் தீப்பொறி பறக்க சமூக வலைத்தளங்களில் வாதங்களை முன் வைத்து வருகிறார்கள்.