Mammootty Pt web
சினிமா

"லோகா படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் .." - மம்மூட்டி சொன்ன கலகல தகவல் | Mammootty | Lokah

லோகா படத்தில் கூட முதலில் நான் இருக்கிறேன் என எனக்கு தெரியாது. அதில் `வேண்டாம்' என்ற ஒரே வசனம் மட்டும் நான் பேச வேண்டும் என கூறினார்கள்.

Johnson

மலையாள திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்கள் மோகன்லால் - மம்மூட்டி. 18 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து பேட்ரியாட் என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் மம்மூட்டி. அதில் "நானும் மோகன்லாலும் பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ளோம். ஆனால் அந்தப் படம் நட்சத்திரங்கள் மூலம் நகரும் கதை கிடையாது. நாங்கள் இரு பாத்திரங்களாகவே நடிக்கிறோம். அந்தப் படம் அதன் கதையால் மட்டுமே நகர்த்தப்படும். அதில், கமர்ஷியல் படங்களுக்கான தன்மை இருந்தாலும், அது ஒரு பரிசோதனை முயற்சி தான். இதில் நடிகைகள் இருக்கிறார்கள், எங்களுக்கு ஜோடி யாரும் இல்லை. இப்படத்துக்கு என ஒரு ஃபார்முலா கிடையாது. ஆனால் இந்தப் படமே ஒரு ஃபார்முலாவாக மாறும்.

நாங்கள் ஒருபோதும் பிரபல்யத்தை எங்கள் தோள்களில் சுமந்து கிடையாது. மேலும் இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் ஹீரோ இல்லை, கதை தான் ஹீரோ என்பது எங்களுக்கு தெரியும். இதில் மோகன்லால் நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அவருக்கு கதை பிடித்ததால் தான் நடித்தார். நான் அவர் படத்தில் நடிப்பதும், அவர் என் படத்தில் நடிப்பதும் என எந்த ஈகோவும் இல்லாமல் தான் பயணித்திருக்கிறோம். அவர் சமீபத்தில் திலீப் படத்தில் நடித்தார். நான் சில இளைஞர்கள் நடித்த படத்தில் கேமியோ ரோலில் நடித்தேன்.

லோகா படத்தில் கூட முதலில் நான் இருக்கிறேன் என எனக்கு தெரியாது. அதில் `வேண்டாம்' என்ற ஒரே வசனம் மட்டும் நான் பேச வேண்டும் என கூறினார்கள். அந்தப் படத்தில் என்னுடைய கையாக காட்டப்படுவது கூட என் கை அல்ல. படம் வெளியான பின்னர் தான், அது நீங்கள் குரல் கொடுத்துள்ள பாத்திரத்தின் (மூத்தோன்) கை என்று சொன்னார்கள். இப்போது அதில் நான் நடித்தே ஆக வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். இனி அதில் நான் நடிக்க வேண்டுமானால், அவர்கள் எனக்கு கொடுக்கும் சம்பளத்தின் மூலம் என்னை சம்மதிக்க வைக்க வேண்டும்" என்றார்.