‘என் மீதான வழக்கில் நிரபராதி என்று விடுதலையாகும் வரை சினிமா தொடர்பான எந்த சங்கத்திலும் சேர விரும்பவில்லை’ என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ வின் தலைவராக கடந்த 18 வருடமாக நடிகர் இன்னசென்ட் இருந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை அடுத்து, புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். இவர் பதிவியேற்ற பின்னர், ‘அம்மா’வில் இருந்து பாலியல் குற்றச்சாட்டிற்காக நீக்கப்பட்ட நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். எனவே பாதிக்கப்பட்ட நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார்.
நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உட்பட பல நடிகைகளை உள்ளடக்கிய திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்த முடிவை நடிகர் சங்கம் திரும்ப பெற வேண்டும்’ என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது.
இந்நிலையில் திலீப் ’அம்மா’வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ’ நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை நடிகர் சங்கம் ரத்து செய்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி. ஆனால் எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கிக்கொண்டேன். இதில் இருந்து நிரபராதி என்று விடுதலையாகும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. என்னை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்ததால் நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலையளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.