’எனது எல்லா படங்களிலும் காளி வெங்கட் இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று கூறிய இயக்குநர் சுதா கொங்கரா, அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்கரா. ஆனால், அவரை முன்னணி இயக்குநராக்கியது 2016 ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம்தான். இப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்தது. ரித்திகா சிங்கின் குடிகார அப்பாவாக நடித்து காமெடியோடு கலந்த குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருப்பார் காளி வெங்கட். தற்போது சூரரைப் போற்று படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, "எனது எல்லா படத்திலும் காளி வெங்கட்டை இயக்க ஆசைப்படுகிறேன். சூரரைப் போற்று ஷூட்டிங்கின் போது ஊர்வசி மேடமும் சூர்யாவும் பேசும் சீன்களை படமாக்கிக்கொண்டிருந்தோம். உதவி இயக்குநர்கள் சூர்யாவுக்கு காட்சிகளை விளக்கி கொண்டிருந்தார்கள்.
அங்கு வந்த காளி வெங்கட், ஒரு பக்க வசனத்தை அப்படியே படித்து உடனடியாக சூர்யா போல் பேச பேச சூர்யா அப்படியே நடித்தார். ’எனது 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்படியொரு மனுஷனை பார்த்ததில்லை" என்று பாராட்டவும் செய்தார்,
சுதா கொங்கரா பேசிய வீடியோவை காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் காளி வெங்கட் தெகிடி, முண்டாசுப்பட்டி படங்களின் மூலம்தான் பிரபலமானார்.