இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டனர். அப்போது சிவகுமாரை காணவந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். அப்போது செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை சிவகுமார் படாரென தட்டிவிட்டார். இதில் அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது. சட்டென்று நடைபெற்ற இந்த நிகழ்வால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் சிவகுமார், எல்லோரையும் போல் தானும் மனிதன்தான் என்றும், தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதாக தெரிவித்தார். செல்ஃபி விவகாரத்தில் விளக்கம் அளித்த அவர், பாதுகாவலர்களை ஓரம் தள்ளிவிட்டு நடக்கவே முடியாதபடி செல்ஃபி எடுப்பது நியாயமா..? என்றும் கேள்வி எழுப்பினார். உங்களை படம் பிடித்துக் கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எடுத்திருக்கலாமே என்றும் அவர் விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் நேற்று நடிகர் சிவகுமார் அளித்த விளக்கத்தில்:-
“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்ஃபி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?” என கேட்டிருந்தார்.
இந்நிலையில் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து நடிகர் சிவகுமார் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு பிபரல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயம் வெரி சாரி” என கூறியுள்ளார்.