சினிமா

கந்துவட்டிக்கு ஆதரவாக சீமான் பேசுவது வேதனை அளிக்கிறது: அமீர்

கந்துவட்டிக்கு ஆதரவாக சீமான் பேசுவது வேதனை அளிக்கிறது: அமீர்

rajakannan

கந்துவட்டிக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீமான் எடுத்துள்ளது வேதனை அளிக்கிறது என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

புதிய தலைமுறைக்கு அமீர் அளித்த சிறப்பு பேட்டியில் அசோக்குமார் மரணம் தொடர்பாகவும், அன்புச் செழியன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அன்புச் செழியன் பிரச்னை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த சீமான், மார்வாடி கொடுத்தால் பைனான்ஸ் தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா என்று கேட்டிருந்தார். 

இது குறித்து அமீர் தனது பேட்டியில், “ஆட்சி மாற்றத்திற்கான அல்லது ஆள் மாற்றத்திற்கான தத்துவத்தை முன் எடுத்து வரவில்லை. அரசியல் மாற்றத்திற்கான தத்துவத்தை முன் எடுத்து வருவதாக சொல்லி வந்த சகோதரர் சீமான், கந்துவட்டிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது வேதனை அளிக்கிறது. மார்வாடி, சேட், மலையாளி என யார் கொடுத்தாலும் வட்டி வட்டிதான். கந்துவட்டி சட்டம் என்று ஒன்று உள்ளது. விஷால் உள்ளிட்டோர் அன்புச் செழியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இருப்பதற்காக எதிர்க்கிறார்கள் என்று சீமான் கூறினால் அதனை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அசோக்குமார் மரணத்திற்கு காரணம் அன்புச் செழியன் இல்லை என்று சீமான் சொல்கிறார் என்றால், எதை வைத்து சொல்கிறார்? 

இந்த விவகாரத்தில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று தெரிவில்லை என சீமான் கூறியிருந்தால் பிரச்சனை இல்லை. இது தவிர்க்க முடியாதது என்கிறார். தவிர்க்க முடியாது என்றால் இந்த நாட்டில் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதுவும் தவிர்க்க முடியாது என்று சொல்லலாம். சீமான் இவ்வாறு பேசுகிறார் என்பதை அதிர்ச்சியாக பார்க்கிறேன். 

நேற்று வரை அவரிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன். தற்போது எனக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வளது மன அழுத்தத்தில் இருக்கிறேன். மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில் நின்று கந்துவட்டிக்கு ஆதரவாக, அன்புச் செழியனுக்கு ஆதரவாக அவர் பேசியதை என்னால் ஏற்கவே முடியாது. மார்வாடிகளைவிட அன்புச் செழியன் நல்லவரா என்பதல்ல விவாதம். இதுநாள் வரை சீமானை நான் பார்த்த பார்வையே வேறு. சீமான் என்பவர் சாதாரண அரசியல் கட்சி தலைவர் என்று நான் பார்க்கவில்லை. மாபெரும் சிந்தனையாளராக பார்க்கிறேன். 

இந்த நிகழ்வுக்கு பிறகு அவரை எப்படி பார்ப்பது என்று அச்சமாக இருக்கிறது. தப்பு யார் செய்தாலும் தப்புதான். என்னுடைய சகோதரர் செய்தாலும் தப்புதான். நாளை அமீர் தப்பு செய்தாலும் என்னுடைய தம்பி மாபெரும் தவறை செய்துவிட்டான் என்று சீமான் சொல்ல வேண்டும்” கூறியுள்ளார்.