சினிமா

‘தொழிலதிபரை மணக்கிறேனா?’ - திருமண வதந்தி குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி

webteam
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் தொடர்பாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷூக்கு அறிமுகம் தேவையில்லை.   இவர் மூத்த நடிகை மேனகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் ஆவார்.   தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வருகிறார்.  தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் வெளியான இரு  மொழி படத்தில் நடித்த போது அவருக்குத்  தெலுங்கு மொழிக்கான விருது கிடைத்தது.  இவரது நடிப்பில் சமீபத்தில் 'சர்கார்' படம் வெளியானது. இப்படத்தில் விஜய் ஜோடியாக இவர் நடித்திருந்தார். 
தற்போது கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்கள் முன்பு கீர்த்தி சுரேஷ் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக  சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரவியது.  அதில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்குத் திருமணமான  செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.  கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் ஒரு முக்கியமான அரசியல் கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளவர்.  எனவே, கீர்த்தி சுரேஷூக்கு அவர் அரசியல் வாழ்க்கையோடு  தொடர்புடைய  ஒரு  தொழிலதிபரைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்பட்டது. 
மேலும் கீர்த்தி சுரேஷூம்  தனது தந்தையின் யோசனைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.  விரைவில்  கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து அவரது திருமணம் குறித்து ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் கசிந்திருந்தது.  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக ‘ஹைதராபாத் டைம்ஸ்’ பத்திரிகைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். அதில், “இந்தச் செய்தி எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி பரவத் தொடங்கியது என்பது எனக்குத் தெரியாது. அதுபோன்ற திட்டங்கள் எதுவும் இப்போது என்னிடம் இல்லை என்பதை  தெளிவுபடுத்துகிறேன். நான்  திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அபத்தமான வதந்திகளைப் பரப்புவதை விட்டுவிடுங்கள். நாட்டில் இப்போது மிக முக்கியமான வேறு பிரச்னைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.  இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைக் காட்டிலும் கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்த வேண்டும். நான் மக்களுக்குச் சொல்ல விரும்புவது பாதுகாப்பாக இருங்கள்.  சமூக விலகலைப் பராமரியுங்கள். மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்” எனக் கூறியுள்ளார்.