சினிமா

”மீடியா முன்னாடி பேசவே பயமா இருக்கு” - வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு மீண்டும் பேச்சு!

”மீடியா முன்னாடி பேசவே பயமா இருக்கு” - வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு மீண்டும் பேச்சு!

JananiGovindhan

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் 66வது படமான வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பிலிருந்து இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகைக்கு அதே நாளில் ரிலீசாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் இரு நடிகர்களின் ரசிகர்களும் வாரிசு, துணிவு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் வாரிசு படத்துக்கு அதிகளவு தியேட்டர் ஒதுக்க வேண்டும் எனவும், ஏனெனில் விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என்றும் இது பற்றி துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்கப் போவதாகவும் தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தில் ராஜுவின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், நேற்று (டிச.,17) நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த தில் ராஜூ பேசியதும் தற்போது வைரலாகியிருக்கிறது.

அதில், “எனக்கு மீடியா முன்பு பேசவே பயமாக இருக்கிறது. 45 நிமிஷம் கொடுத்த இன்டெர்வியுவில் வெறும் 20 செகெண்ட் வீடியோவை மட்டும் எடுத்து பரப்பி சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். நான் யாரையும் பாராட்டவும் இல்லை யாரையும் குறைவாக பேசவும் இல்லை. எல்லா நல்ல படங்களுக்கும் என்னுடைய ஆதரவு உண்டு” என கூறியிருக்கிறார் தில் ராஜூ.