சினிமா

"அண்ணாமலை படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன்" குஷ்புவின் தியேட்டர் அனுபவம்

webteam

எங்கு பிறந்தாலும் ஒவ்வொருவருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்த அனுபவங்கள் இருக்கும். இப்படி தன் அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு. "தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் தரம் - வீர். அந்தப் படத்தை மும்பை அந்தேரியில் இருந்த நவ்ரங் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

"தரம் வீர் படம் 1977ம் ஆண்டு வெளியானது. தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஜீனத் அமன் மற்றும் நீத்து சிங் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அந்தப் படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த நினைவு இருக்கிறது. அது நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்த படமாக இருக்கும். நடிகர்கள் எல்லாம் ரோமன்போல உடைகள் அணிந்திருப்பார்கள்.

இதுவொரு பெரிய பட்ஜெட் படம். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படத்தை பெரிய திரையில் பார்த்த அனுபவம் அசாதாரணமானது. என்னை அம்மாதான் அழைத்துச்சென்றார். அதுதான் நான் தியேட்டரில் படம் பார்த்த முதல் அனுபவம்" என்று பால்ய நினைவுகளில் மூழ்கி எழுந்துள்ளார் குஷ்பு.

மும்பையில் உள்ள மராத்தி மந்திரில் "ஷோலே" படத்தைப் பார்த்து ரசித்த அனுபவத்தையும் விவரிக்கும் அவர், "சென்னைக்கு நகர்ந்ததும் மவுண்ட் ரோடு ஆனந்த் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் என்ன படம் என்ற ஞாபகமில்லை. இங்கு படம் பார்த்த முதல் தியேட்டர் அதுதான். நான் நடித்த அண்ணாமலை, பிரம்மா படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். சின்னத்தம்பி படத்திற்குப் பிறகுதான் இந்த அனுபவத்தைப் பெற்றேன்" என்றும் நெகிழ்ந்துள்ளார்.

"தற்போது தியேட்டருக்குப் போகும் வாய்ப்பே கிடைப்பதில்லை.  மக்கள் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் தியேட்டருக்குச் சென்று பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவமே தனிதான்" என்று குஷ்பு சுட்டிக்காட்டியுள்ளார்.