சினிமா

பாலியல் சுரண்டல்கள் குறித்து பேசிய ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி..!

பாலியல் சுரண்டல்கள் குறித்து பேசிய ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி..!

Rasus

‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி திரைப்படத் துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சுரண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காலா’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளவர் ஹூமா குரேஷி. இவர் 71-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது திரைப்படத் துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

விழாவில் பேசிய அவர், “ பல பெண்களுக்கு அவர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது கடினமான விஷயமாக உள்ளது. நாம் இந்தியாவில் வாழ்கிறோம். பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தைரியமாக பேசினால், மக்கள் அப்பெண்ணின் நடத்தை குறித்து சான்றிதழ் கொடுக்கின்றனர். மக்களுக்கு பெண்ணின் நடத்தை பற்றி கருத்துக் கூற எந்த உரிமையும் கிடையாது. ஒரு பெண் அழுது கொண்டு உதவிக்கு கேட்டால், மக்கள் அப்பெண்ணுக்கு உதவி பாதுகாக்க முன்வர வேண்டும். நாம் நம் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயமானது.

திரைப்படத் துறையில் மட்டும் பெண்களுக்கு பாலியல் சுரண்டல்கள் இல்லை. அது நிறைய இடங்களில் உள்ளது. திரைப்படத் துறை மட்டுமல்லாது பல துறைகளிலும் பெண்கள் பாலியல் சுரண்டல்களை சந்தித்து வருகின்றனர்” எனக் கூறினார்.