சினிமா

“எப்படி சார் இவ்ளோ ஃபிட்டா இருக்கீங்க?” - சூர்யா பர்த்டே ஸ்பெஷல்

Sinekadhara

சூர்யா சினிமா பின்னணியில் வளர்ந்திருந்தாலும் தனி ஆளாக நின்று இந்த உயரத்தை அடைய அவர் பட்ட அவமானங்களும், கடந்து வந்த தடைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
சூர்யாவின் அப்பா சிவக்குமார் பிரபல நடிகராக இருந்தபோதிலும் நடிகரின் மகன் என தன்னை ஒருபோதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத அவர் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சினிமா மீது நாட்டம் இல்லாத சூர்யா அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்டவர் எனச் சொல்லப்படுகிறது. அதனால் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என சிவக்குமார் மற்றும் தம்பி கார்த்தி கூறியிருக்கின்றனர்.

1997-ஆம் ஆண்டு ’நேருக்கு நேர்’ படத்தில் தனது காலேஜ் சீனியரும் நண்பருமான நடிகர் விஜய்யுடன் நடிகராக அறிமுகமானர் சூர்யா. அதற்கு பிறகு ’காதலே நிம்மதி’, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள் இவரை பெயர்சொல்லும் அளவிற்கு கொண்டுவந்தது. ஆனால் இவருக்கு நன்றாக நடனம் ஆடத் தெரியவில்லை என்பது போன்ற பல விமர்சனங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். மீண்டும் 2001-இல் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படம்தான் இவருக்கு அடுத்தடுத்த பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. அடுத்து நடித்த ‘ நந்தா’ படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றார். அந்தப் படம்தான் அவரை டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது.

அடுத்தடுத்து நடித்த ‘உன்னை நினைத்து’, ’மௌனம் பேசியதே’, ’காக்க காக்க’, ’பிதாமகன்’, ’பேரழகன்’, ’கஜினி’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘வாரணம் ஆயிரம்’, ’அயன்’, ‘ஆதவன்’ போன்ற படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்த்தில் உயரத்தில் நிறுத்தின. அடுத்து ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என சிங்கம் படத்தில் ஆக்ரோஷமான கெட் அப்பில் தோன்றி தன்னுடைய ரசிகர் பட்டாளத்தையே விரிவாக்கினார்.

நடிகராக மட்டுமல்லாமல் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற ஷோவில் தொகுப்பாளராகவும் தோன்றி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து கல்விக்கு உதவி வருகிறார். இது மக்கள் மத்தியில் சூர்யாவை ஒரு நல்ல மனிதாபிமானம்மிக்க மனிதராக அடையாளப்படுத்தியுள்ளது.
’எப்படி சார் இவ்ளோ ஃபிட்டா இருக்கீங்க’ என்று மேடைகளில், நேர்காணல்களில் அவரை நோக்கி பலரும் கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு இளமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இன்றும் இருக்கிறார் சூர்யா. சூர்யா டயட் ப்ளான், வொர்க் அவுட் ப்ளான் என யுடியூபில் பல வீடியோக்களை காணமுடியும்.



‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் தன்னுடன் நடித்த ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது. அதிலிருந்து ’சில்லுனு ஒரு காதல்’ வரை அவர்களுடைய காதல் கப்பலின்மீது பல எதிர் அலைகள் மோதி அடித்த போதிலும், அதை திருமணம் என்ற வாழ்க்கை அழகாக கரை சேர்த்தார் சூர்யா. சூர்யாவைப் பற்றி ஜோதிகா பேசாத மேடைகளே கிடையாது. அவரைப்போல ஒரு கணவரை யாரும் பார்க்கமுடியாது என எப்போதும் பெருமிதப்பட்டுக்கொள்வார். இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த லாக் டவுன் காலத்தில் சாலை ஓரங்களில் இருக்கும் ஏழைகளுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து பல உதவிகளை செய்துவருகிறார். ஹேப்பி பர்த்டே சூர்யா!