சினிமா

படங்கள் விற்பனை எப்படி நடக்கிறது..? லாப நஷ்டம் தெரிவது எப்படி..? தர்பாரில் என்னதான் சிக்கல்..?

படங்கள் விற்பனை எப்படி நடக்கிறது..? லாப நஷ்டம் தெரிவது எப்படி..? தர்பாரில் என்னதான் சிக்கல்..?

PT

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘தர்பார்’. படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. இதனால் ‘தர்பார்’ படத்திற்கான டிக்கெட் புக்கிங் களைகட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ‘தர்பார்’ படம் வெளியிடப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் ரஜினி ரசிகர்களால் ‘தர்பார்’ படம் கொண்டாடப்பட்டது.

இதனிடையே லைகா நிறுவனம் தயாரித்த ‘தர்பார்’ படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும், இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை ரஜினிகாந்த் பெற்றுத்தர வேண்டுமென்றும் விநியோகஸ்தர்கள் கடந்த 30-ஆம் தேதி ரஜினியின் இல்லத்திற்கு சென்றனர். ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, விநியோகஸ்தர்களை வேறு தருணத்தில் சந்திப்பதற்கான கெடு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம், பண இழப்பு தொடர்பாக விநியோகஸ்தர்கள் பேச முயற்சித்தபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து வெளியேற்றினர். பெரிய பட்ஜெட் படங்களோ, சின்ன பட்ஜெட் படங்களோ விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நடக்கும் இந்த யுத்தம் காலங்காலமாக நடந்து வருகிறது. ஆகவே இங்கு ‘தர்பார்’ படத்திற்கு பின்னால் உள்ள பிரச்னையை அலசுவதை விட, காலங்காலமாக இதற்கு பின்னால் இருக்கும் மூலப்பிரச்னையை அலசி ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

இதனால் இதுபற்றி தெரிந்து கொள்ள சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான பிஸ்மியை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது:-

தயாரிப்பு தொடங்கி-தியேட்டர் உரிமையாளர் வரை ஒரு திரைப்படம் எப்படி சென்றடைகிறது ?

ஒரு திரைப்படத்தை திரைக்கு கொண்டு செல்வதற்கு சில வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு முறை, தயாரிப்பாளரே நேரடியாக தியேட்டர்களில் படத்தை விநியோகம் செய்வது. மற்றொரு முறை விநியோகஸ்தர்களின் மூலம் படத்தை திரைக்கு கொண்டுவருவது. இதில் விநியோகஸ்தர்கள் மூலம் படத்தை திரைக்கு கொண்டுவருவதில் சில வழி முறைகள் இருக்கிறன.

அவை என்னவென்றால் அவுட்ரேட் மற்றும் மினிமம் கேரண்டி

அவுட்ரேட் என்பது என்னவென்றால் ஒரு படத்தை அதன் தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விநியோகஸ்தரிடம் விற்கிறார் என்று வைத்துக்கொண்டால் அப்படத்தின் லாபமோ அல்லது நஷ்டமோ அதன் விநியோகஸ்தரையே சேரும்.

மினிமம் கேரண்டி என்பது என்னவென்றால் ஒரு படத்தை அதன் தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விநியோகம் செய்யும்போது, அந்தத் தொகைக்கு மேல் அந்தப் படம் வசூல் செய்தால், அந்த பணத்தை தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சம அளவில் பங்கீட்டு கொள்வார்கள். அதேசமயம், படம் குறிப்பிட்ட தொகைக்கு குறைவாக வசூல் செய்யும்போது நஷ்டம் விநியோகஸ்தரையே சேரும். ‘தர்பார்’ படத்தை பொருத்தவரை அதன் விநியோகம் சென்னையை தவிர மற்ற இடங்களில் மினிமம் கேரண்டி முறையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது அவர்கள் தங்களுக்கான நஷ்ட தொகையை தயாரிப்பாளரிடம் கேட்கின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நஷ்ட தொகையை அவர்கள் நியாயப்படியோ அல்லது சட்டப்படியோ கேட்பதற்கு உரிமை கிடையாது. ஆனால் தமிழ் சினிமாவில் நஷ்டப்பட்டவர்கள் தங்களுக்கான இழப்புத் தொகையை வாங்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விநியோகஸ்தர்கள். ஏன் என்றால் இவர்களின் பங்கு இல்லாமல் எந்தவொரு படத்தையும் திரைக்கு கொண்டு வர முடியாது. இதனால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் நஷ்ட தொகையை விநியோகஸ்தர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.

ஒரு படத்தின் லாபம் அல்லது நஷ்டம் என்பதை எப்படி கணக்கீடுகிறார்கள்?

ஒரு படம் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படுகிறது என்றால் அந்தப்படம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்திருக்க வேண்டும் என்பது கணக்கு. அந்த கணக்கில் படம் வந்தால் லாபம்; இல்லை என்றால் நஷ்டம். ஆனால் இதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் சென்னையை தவிர கிராமப் புறங்களில் டிக்கெட் விற்பனை என்பது முறையற்றதாகக இருக்கிறது.

இதன்மூலம் அவர்கள் நஷ்ட தொகையை விட அதிகப்படியான தொகையை கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் இதற்கான ஒரே தீர்வு என்பது அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் டிக்கெட் முறையை கிராமப் புறங்களில் நடைமுறைப்படுத்துவது மட்டும்தான்.

டிஜிட்டல் முறைக்கு சினிமா மாறுவதால் தியேட்டர்களுக்கு வரும் ஆடியன்ஸ் வரத்து குறைந்து வருகிறதா?

டிஜிட்டலில் படத்தை விநியோகம் செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு முன்னரே கணிசமான லாபம் கிடைக்கிறது. அந்த லாபத்தை பெறவே அவர்கள் படத்தை டிஜிட்டலுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் இதனை சில நபர்கள் தவறான வழியில் பயன்படுத்தி படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.” என பிஸ்மி தெரிவித்தார்.

டிஜிட்டல் விற்பனையால் தியேட்டர் ஆடியன்ஸ் குறைவதாக எழும் புகார் குறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, படத்தின் கதை மட்டும் நன்றாக இருந்துவிட்டால் போதும். எப்படியும் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும் என தெரிவித்தார்.
------------------