நயன்தாரா அறிக்கை, அதை சுற்றி எழுந்த விவாதங்களும் சர்ச்சைகளும் கடந்த இரண்டு நாட்களாக நாம் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். சரி இதுக்கெல்லாம் காரணமா இருந்ததே, அந்த டாக்குமெண்ட்ரி, Nayanthara Beyond the Fairy Tale அது இப்போ வெளியாகிடுச்சு. அப்படி அதுல என்ன விஷயங்கள்தான் இருக்கு? வாங்க பார்க்கலாம்...
நயன் - விக்னேஷ் சிவன் கல்யாணத்துக்கு முன்னாலயே அவங்களோட கல்யாணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படமா எடுக்கறாங்க, அதனால கல்யாணத்துல யாரும் செல்போன் கொண்டு போக முடியாதுனு ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் எல்லாம் போட்டாங்க. அப்போ அதை இயக்கினது கௌதம் மேனன். இன்னும் சொல்லப் போனா, அப்போ அது வெறும் திருமணத்தைப் பதிவு செய்யும் ஆவணப்படமாதான் திட்டமிட்டாங்க. இப்போ வந்திருக்கறது திருமணம் பற்றியது மட்டுமில்ல... இது நயன்தாராவோட குட்டி பயோகிராஃபினே சொல்லலாம்.
ஏர்ஃபோர்ஸ்ல வேலை செய்யும் அப்பா குரியன், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா ஓமணா குரியன், அண்ணன் லியோன்னு குடும்பத்தை அறிமுகப்படுத்துறதுல இருந்து தொடங்குது ஆவணப்படம்.
காலேஜ்ல அடுத்து என்ன படிக்கலாம்னு சிந்தனையில இருக்கும் டயானாவுக்கு ஒரு போன் கால் வருது, எதிர்முனையில ஒலிக்கும் குரல் பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடு. அப்போ பார்ட்-டைமா மாடலிங் பண்ணிட்டிருந்த டயானாவோட போட்டோ வனிதா பத்திரிகையில வந்திருக்கு, அதைப் பார்த்துதான் தன்னோட அடுத்தப் படமான `மனசினக்கரே’ல நடிக்க கூப்பிடறார் இயக்குநர்.
முதல்ல தயங்கும் டயானாவ வந்து ஷூட்டிங் பாருனு சொல்லி கூப்படறார் சத்யன், கொஞ்ச நாள்ல அங்க எல்லோரும் பழக்கமாகிடறதால அப்பறம் நடிக்க துவங்கறாங்க, டயானான்ற பெயர் நயன்தாரானு மாற்றப்படுது.
அடுத்து மோகன்லாலோட விஸ்மயத்தும்பத்து, ஐயா படம் மூலமா தமிழ்ல அறிமுகம், சூப்பர்ஸ்டாரோட சந்திரமுகினு ஒரு பெரிய ரவுண்டுக்கு தயாரானாங்க நயன்தாரா.
நயனோட வாழ்க்கை வெளிய இருந்து பாக்கும் போது ரொம்ப கலர்ஃபுல்லா இருந்தாலும் அவங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்ததையும் பதிவு செய்து இந்த ஆவணப்படம்.
நயனோட அப்பா குரியனுக்கு பல வருடங்களா உடல்நிலை சரி இல்லாம பெட்ரெஸ்ட்ல இருக்கார். அவர ஒரு குழந்தை மாதிரி அவங்க அம்மா ஓமணா தான் பாத்துக்கறாங்க.
தமிழ்ல மூணாவதா நயன் நடிச்ச கஜினி படத்துல, உருவகேலிக்கு உள்ளானதைப் பத்தியும் இதுல பதிவு செய்திருக்காங்க. அதுக்குப் பிறகு பல பாத்திரங்கள் பண்ணாலும், ஸ்ரீராம ராஜ்யம் படத்துல சீதா ரோல்ல நடிச்சப்போ, ஒரு கவர்ச்சி நடிகை எப்படி சீதாவா நடிக்கலாம்னு பெரிய சர்ச்சையும் எழுந்தது.
அடுத்தது நயனோட காதல், ரொம்ப வெளிப்படையா பேசாட்டியும் முதல் காதல் பத்தியும், அதுல எந்த உண்மையும் இல்லன்னு தெரிஞ்ச பின்னால விலகினதையும் சொல்லியிருக்காங்க.
இரண்டாவதா வந்த காதல், அந்த நபர்தான் இனி நடிக்கக் கூடாதுனு சொன்னதும், தொடர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட பல அழுத்தங்களையும் வெளிப்படுத்தியிருக்காங்க.
நயனோட வாழ்க்கையில இதுதான் ரொம்ப மோசமான காலகட்டம். அந்த நேரத்துல தன்னோட கஷ்ட்டத்தை எல்லாம் தன்னை அறிமுகப்படுத்தின சத்யன் அந்திகாடுகிட்ட சொல்லியிருக்காங்க. அப்போ அவங்களுக்கு தேவைப்பட்டது எல்லாம், கஷ்ட்டத்த சொல்ல ஒரு நபர், அந்த கடினமான நேரங்கள்ல ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்து நாள் முழுக்க அழுதேன்னு பதிவு செய்திருக்காங்க நயன்.
நயன் இப்போ இருக்கும் இடம், இதுவரை யாருக்கும் கிடைக்காதது, அதை அவங்க தனியா போராடி மட்டுமே அடைஞ்சிருக்காங்கனு பார்வதி குறிப்பிடுவாங்க. அப்படி நயன் போராடி போராடி மேல வந்தது பல முறை!
கஜினி படத்துல உருவகேலி செய்யப்பட்டத தாண்டி பில்லா படம் மூலமா வேற ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்தாங்க... ராமராஜ்ஜியம் படத்துல நடிக்கக் கூடாதுன்னு சர்ச்சை எழுந்தப்போ, அந்த கதாப்பாத்திரத்துல நடிக்க முழு அர்ப்பணிப்போட அசைவம்கூட சாப்பிடாம நடிச்சாங்க.
ஒவ்வொரு முறை அன்புக்காக ஏங்கி காதல்ல ஏமாத்தப்படறப்போ, சினிமால இருந்து ப்ரேக் எடுத்தாலும், அவங்க ஏற்கனவே நடிச்ச படங்கள் வெளியாகிட்டே இருந்தது. மறுபடி நடிக்க வாங்கன்ற அழைப்புகளும் ஓயல, அப்படி அவங்களுக்கு கம்பேக் படமா அமைஞ்சதுதான் அட்லீ இயக்கின ராஜா ராணி.
அன்புக்காக ஏங்கின நயனுக்கு நானும் ரௌடிதான் மூலமா ஒரு சர்ப்ரைஸ் நடந்தத குறிப்பிடறாங்க, விக்கி மேல ஒரு அன்பு வர, அவங்களே ப்ரப்போஸ் பன்றாங்க, அந்த ஒட்டு மொத்த யூனிட்ல விக்கி - நயன் ரிலேஷன்ஷிப்ப முதல்ல தன்கிட்ட சொன்னது தனுஷ்னு குறிப்பிடறாங்க ராதிகா.
நயன் தன்ன விரும்பறாங்கன்ற விஷயத்த யாருகிட்டயும் சொல்லவும் முடியாம இருந்த தருணங்கள்ல இருந்து, ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குதான் கிடைக்கணும்னு இருந்தா’ன்ற மீம் வரை பல விஷயங்கள பகிர்ந்துக்கறார் விக்கி.
ஹைலைட் என்னென்னா விக்கி - நயன் இடையில் வரும் செல்ல சண்டைகள், அதுக்கு சமாதானம் பேசப்போய் பல்பு வாங்குறதுனு எல்லாத்தையும் நெல்சன் சொன்ன விதம் செம காமெடி!
சினிமாவ, சினிமா பிரபலங்கள்ல தொடர்ந்து ஃபாலோ பன்றவங்களுக்கு இந்த டாக்குமெண்ட்ரில புதுசா என்ன இருக்கும்னு கேட்டா அது கொஞ்சம்தான். ஆனா ரொம்ப கடினமான பயணத்தை செய்திருக்கக் கூடிய ஒரு பொண்ணோட வாழ்க்கைல என்ன நடந்தது, அவங்க மனசுல அப்போ என்ன ஓடுச்சுன்னு ஓரளவுக்கு நயன்தாராவுக்கு நெருக்கமா நம்மள கொண்டு போகுது இந்த ஆவணப்படம்.