2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரித்த ' ஹோம்பவுண்ட்' திரைப்படம் இடம்பிடித்துள்ளது.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரிப்பில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்திருந்த படம், ' ஹோம்பவுண்ட்'. இந்தப் படம், தற்போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கார் அகாடமி 12 பிரிவுகளுக்கான குறுகிய பட்டியல்களை நேற்று அறிவித்திருந்தனர். அதில், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில், அவர்கள் 15 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
அந்தப் பட்டியலில் அர்ஜென்டினாவின் ’பெலன்’ , பிரேசிலின் ’தி சீக்ரெட் ஏஜென்ட்’ , பிரான்சின் ’இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடென்ட்’ , ஜெர்மனியின் ’சவுண்ட் ஆஃப் ஃபாலிங்’ , ஈராக்கின் ’தி பிரசிடென்ட்ஸ் கேக்’ , ஜப்பானின் ’கோகுஹோ’ , ஜோர்டானின் ’ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ’ , நார்வேயின் ’சென்டிமென்டல் வேல்யூ’ , பாலஸ்தீனத்தின் ’பாலஸ்தீனம் 36’ , தென் கொரியாவின் ’நோ அதர் சாய்ஸ்’ , ஸ்பெயினின் ’சிராட்’ , சுவிட்சர்லாந்தின் ’லேட் ஷிப்ட்’ , தைவானின் ’இடது கை பெண்’ மற்றும் துனிசியாவின் ’தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆகியவற்றுடன் இந்தியாவின் ’ஹோம்பவுண்ட்’படமும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த 15 படங்களில் ஐந்து படங்கள் இறுதி பரிந்துரைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். இது ஜனவரி 22 அன்று அறிவிக்கப்படும்.
ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலில் 'ஹோம்பவுண்ட்' படம் இடம்பிடித்தது குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர், “98வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான தேர்வுப் பட்டியலில் ’ஹோம்பவுண்ட்’ இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த அசாதாரண அன்பு மற்றும் ஆதரவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த சாதனையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் திரைப்படவியலில் இந்த பெருமைமிக்க மற்றும் முக்கியமான படத்தைப் பெறுவதில் நாங்கள் அனைவரும் பாக்கியவான்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் படத்தின் இயக்குநர் நீரஜும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் இரண்டு பால்ய நண்பர்களின் கதையே, இந்த ’ஹோம்பவுண்ட்’ ஆகும். முன்னதாக இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது.