ஹோம்பவுண்ட் x page
சினிமா

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியல்.. ஜான்வி கபூர் நடித்த Homebound படம் தேர்வு!

ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்த ’ஹோம்பவுண்ட்’ திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Prakash J

ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்த ’ஹோம்பவுண்ட்’ திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீரஜ் கய்வான் இயக்கி ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ள ’ஹோம்பவுண்ட்’ (Homebound) திரைப்படம், 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் கொண்ட குழு ’ஹோம்பவுண்ட்’ படத்தைத் தேர்வு செய்துள்ளது. கரண் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லாவின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம், சர்வதேச மக்கள் தேர்வு விருது பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின்கீழ் இப்படம் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறது. இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தேர்வுக் குழு, சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான 98வது அகாடமி விருதுகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு என்று அறிவித்து, ’ஹோம்பவுண்ட்’ படத்திற்கு அதன் சொந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

Homebound

இந்தியாவில் நிலவும் சாதி, மத வேற்றுமைகளுக்கு எதிராக இரண்டு நண்பர்கள் போராடுவதே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. அதாவது, 2020ஆம் ஆண்டு ’நியூயார்க் டைம்ஸி’ல் பஷரத் பீர் வெளியிட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. கோவிட் ஊரடங்கு காரணமாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து தங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவருக்கு இடையிலான நட்பைப் பற்றி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இப்படம் ’ஹோம்பவுண்ட்' திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) விழாவில் திரையிடப்பட்டபோது, கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்ட பார்வையாளர்கள் 9 நிமிடங்கள் எழுந்துநின்று கைத்தட்டி வரவேற்பு அளித்தனர்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில், தேர்வுக்குழு கமிட்டித் தலைவர் என்.சந்திரா, ”பல்வேறு மொழிகளின் 24 படங்கள், பரிந்துரைக்கு பரிசீலிக்கப்பட்டன. கிராமப்புற மகாராஷ்டிராவில் இரண்டு ஆண்களுக்கு இடையிலான உறவைச் சித்தரித்ததற்காக விமர்சனரீதியான பாராட்டைப் பெற்ற மராத்தி படமான ’சபர் போண்டா’ மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு கல்கத்தாவில் நடந்த கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட ’தி பெங்கால் ஃபைல்ஸ்’ ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும். இது மிகவும் கடினமான தேர்வாக இருந்தது. இவை மக்களின் வாழ்க்கையைத் தொட்ட படங்கள்.. நாங்கள் நடுவர்கள் அல்ல, பயிற்சியாளர்கள். தங்கள் முத்திரையைப் பதித்த வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தோம்” எனத் தெரிவித்தார்.

Homebound

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஹர், “நான் ஒருபோதும் மறக்க முடியாத என்னைக் கிள்ளிக் கொள்ளும் தருணங்களில் இதுவும் ஒன்று. 98ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிவாக எங்கள் #Homebound திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் பெருமையாகவும், பணிவாகவும், பரவசமாகவும் இருக்கிறது! கதையிலும், நம்மிலும், இந்திய சினிமாவிற்கு உலக அரங்கிற்கு நாம் என்ன கொண்டு வர முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்ட @filmfederationofindia-க்கு எங்கள் நன்றி. முழு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.