Adolescense, Sinners Famous International Movies and Series of 2025
ஹாலிவுட் செய்திகள்

2025 Recap | கவனம் பெற்ற சர்வதேச திரைப்படங்கள், இணையத் தொடர்கள் | Sinners | Adolescence

2025ஆம் ஆண்டில் பெரும் கவனம் பெற்ற சர்வதேச திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களின் தொகுப்பை இங்கே காண்போம்.

PT WEB

புலம்பெயர்ந்த கட்டடக் கலைஞரின் வாழ்க்கை  போராட்டம்

The Brutalist

The Brutalist: இயக்குநர் பிராடி கார்பெட் (Brady Corbet) இயக்கத்தில் ஏட்ரியன் பிராடி (Andrien Brady) நடித்துள்ள இப்படம், போருக்குப் பிந்தைய அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஒரு ஹங்கேரியக் கட்டடக் கலைஞரின் 30 ஆண்டுகால போராட்டத்தை விவரிக்கிறது. யூத அடையாளம் மற்றும் அமெரிக்கக் கனவின் பின்னால் இருக்கும் வலிகளை பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகப் போற்றப்படுகிறது.

அதிகாரத்திற்கு எதிரான தனிமனிதனின் கலகம்

One Battle After Another

One Battle After Another: பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) - லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) கூட்டணியில் வெளியான இப்படம், தாமஸ் பின்ச்சனின் (Thomas Pynchon) நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு பிளாக் காமெடி த்ரில்லர். ஒரு முன்னாள் புரட்சியாளர் தன் குடும்பத்தைக் காக்க அதிகார மையங்களுடன் நடத்தும் போராட்டமே கதை. டிகாப்ரியோவின் மிரட்டலான நடிப்பும், கூர்மையான சமூக அரசியல் பகடியும் இப்படத்தை உலக அளவில் கவனிக்க வைத்துள்ளன.

வாம்பையர் பின்னணியில் இனவெறி அரசியல்

Sinners

Sinners: ரையன் கூக்லர் (Ryan Coogler)இயக்கத்தில் மைக்கேல் பி. ஜோர்டான் (Michael B Jordan) இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம், 1930களின் மிசிசிப்பியைப் பின்னணியாகக் கொண்ட ஒரு திகில் படம். தீய சக்திகளிடம் சிக்கிய சகோதரர்களின் போராட்டத்தை விவரிக்கும் இது, வெறும் பேய் படமாக மட்டுமில்லாமல் இனவெறி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையும் ஆழமாகப் பேசியுள்ளது.

மேரி ஷெல்லியின் நாவலுக்கு புதிய உயிர்

Frankenstein

Frankenstein: மேரி ஷெல்லியின் (புகழ்பெற்ற புரட்சிக் கவிஞர் ஷெல்லியின் காதல் மனைவி) புகழ்பெற்ற நாவலைத் தழுவி இயக்குநர் கில்லெர்மோ டெல் டோரோ (Guillermo del toro) உருவாக்கியுள்ள இப்படத்தில் ஆஸ்கார் ஐசக் (Oscar Isaac), ஜேக்கப் எலார்டி (Jacob Elordi)  நடித்துள்ளனர். விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட உயிரினம் தனது இருப்பைத் தேடி அலையும் கதையை, டெல் டோரோ தனது வழக்கமான விஷுவல் மேஜிக் மூலம் சொல்லியிருக்கிறார். படைப்பின் பொறுப்பையும் மனித நேயத்தையும் வலியுறுத்தும் ஒரு சிறந்த கோதிக் டிராமாவாக இது அமைந்துள்ளது.

பிடிஎஸ் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்து

K-Pop Demon Hunters

K-Pop Demon Hunters: புகழ்பெற்ற BTS இசைக்குழுவின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் படம்,  பகலில் உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவாகவும் இரவில் தீய ஆவிகளை வேட்டையாடுபவர்களாகவும் வாழும் பெண்களைப் பற்றியது. இசை, நடனம் மற்றும் ஆக்ஷன் எனப் பல ரசனைகளை ஒன்றிணைத்த மேக்கிங்கால் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

சமூக ஊடக காலகட்டத்தில் பதின்பருவத்தினரின் போக்கு

Adolescence

இணையத் தொடர்களில் Adolescence உலக அளவில் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஒரு 13 வயது சிறுவன் கொலைக் குற்றச்சாட்டில் கைதான பிறகு, அவனது குடும்பமும் சட்ட அமைப்பும் சந்திக்கும் நெருக்கடிகளை இத்தொடர் பேசுகிறது. இதன் அனைத்து எபிசோடுகளும் 'சிங்கிள் ஷாட்' முறையில் படமாக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகும். சமூக ஊடகக் காலகட்டத்தில் டீனேஜ் பருவத்தினரின் மனவோட்டங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ள இத்தொடர், சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறியது.

மர்மங்களுக்கு விடை தரும் அதிரடியான இறுதி சீசன்

Stranger Things 5

Stranger Things (Season 5): சர்வதேச அளவில் இணையத் தொடர் ரசிகர்களின் ஃபேவரிட் ஆன இத்தொடரின் இறுதிப் பாகம் இது. ஹாக்கின்ஸ் நகர சிறுவர்களுக்கும், தீய சக்தியான வெக்னாவிற்கும் இடையிலான இறுதிப் போரை விவரிக்கும் இந்த சீசன், பல ஆண்டுகளாக நீடித்த மர்மங்களுக்கு விடை தருகிறது. நண்பர்களின் பிணைப்பையும், அவர்களின் நெகிழ வைக்கும் தியாகங்களையும் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியுள்ளதால், இது இந்த ஆண்டின் 'மோஸ்ட் வாட்ச்ட்' தொடராக மகுடம் சூடியுள்ளது.

த்ரில்லர் ரசிகர்களுக்கான சிறந்த விருந்து

Department Q

Department Q: 'தி குயின்ஸ் கேம்பிட்' புகழ் இயக்குநர் ஸ்காட் பிராங்க் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் தொடர் இது. ஸ்காட்லாந்து பின்னணியில், தீர்க்கப்படாத பழைய வழக்குகளைத் தூசு தட்டும் ஒரு புலனாய்வுக் குழுவின் கதையை இது சொல்கிறது. குற்றவாளிகளின் இருண்ட பக்கங்களையும், துப்பறியும் அதிகாரியின் மனச்சிக்கல்களையும் ஆழமாக அலசும் இத்தொடர், கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாகும்.

உயிரைக் காக்கும் நிமிடங்களின் போராட்டம்

The Pitt

The Pitt: ஒரு பரபரப்பான மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களின் போராட்டங்களை இத்தொடர் கண்முன் நிறுத்துகிறது. நவீன மருத்துவச் சவால்கள், பணியிட அழுத்தம் மற்றும் நோயாளிகளின் உணர்ச்சிகரமான கதைகளை மிக எதார்த்தமாகப் பதிவு செய்துள்ள இத்தொடர், விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பல்வேறு விருதுகளைக் குவித்தது.

கவனம்பெற்ற சைக்காலஜிக்கல் த்ரில்லர்

Severance

Severance: அலுவலக வாழ்க்கை ஒரு நினைவாகவும், தனிப்பட்ட வாழ்க்கை ஒரு நினைவாகவும் மனித மூளையைப் பிரிக்கும் விசித்திரமான தொழில்நுட்பத்தைப் பற்றிய கதை இது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் உண்மையான அடையாளத்தைத் தேடி நடத்தும் போராட்டமே இதன் கருப்பொருள். யூகிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் தனித்துவமான மேக்கிங்கால் இத்தொடர் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.