Patrick Stewart x - Patrick Stewart
சினிமா

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சர் பேட்ரிக் மறைவு.. வறுமை முதல் திரைப்பயணம் வரை!

Star Trek-ன் கேப்டன் பிகார்ட், X-Men-ன் Professor X எனப் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் மூலம் உலக ரசிகர்களைக் கவர்ந்த சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் திரைப்பயணம் மற்றும் சாதனைகள் குறித்த ஓர் தொகுப்பு..

PT WEB

பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஹாலிவுட் ஜாம்பவான் Sir Patrick Stewart காலமானார். Star Trek, X-Men படங்களில் அனைவரையும் கவர்ந்தவரான சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவு, உலகத் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரின் திரைப்பயணத்தையும் சாதனைகளையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

1940-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியில் உள்ள மிர்ஃபீல்டு என்ற ஊரில் பிறந்தவர் பேட்ரிக் ஸ்டீவர்ட். அவரின் குழந்தை பருவம் கொடிய வறுமையில் கழிந்தது. இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று திரும்பிய ஸ்டீவர்ட்டின் தந்தை மதுப்பழக்கத்தால் மன அழுத்த பாதிப்புகளுக்கும் ஆளானார். இதனால் தனது மனைவியை அடித்து துன்புறுத்துவார். தாயை அடிக்காமல் காப்பதுதான் ஸ்டீவர்ட்டின் வேலையாக இருந்தது. இவருக்கு 12 வயதாக இருக்கும்போது பள்ளி ஆசிரியர் ஸ்டீவர்டுக்கு ஷேக்ஸ்பியரை அறிமுகப்படுததி நாடகத்தில் நடிக்க வைத்தார். அப்போது முதல் ஷேக்ஸ்பியர் மேல் தனி ஆர்வம் வந்தது ஸ்டீவர்ட்டுக்கு. நடிப்பதை மிகவும் பாதுகாப்பான ஒரு விஷயமாகவே நினைக்க ஆரம்பித்தார் ஸ்டீவர்ட். 17 வயது முதல் ஸ்டீவர்டுக்கு தலைமுடி கொட்ட ஆரம்பித்தது. 19 வயதில் முழுவதும் வழுக்கையானார். இளம் பருவத்தில் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த ஸ்டீவர்ட் பின்னர் அதனை பழகிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

Patrick Stewart

1960களில் பிரிட்டனின் புகழ்பெற்ற ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் இணைந்தார். பல ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டார். உலகம் முழுவதும் இவரை அடையாளம் காண வைத்தது சினிமாவும் தொலைக்காட்சியும் தான்.

1987-ம் ஆண்டு வெளியான Star Trek: The Next Generation என்ற தொலைக்காட்சித் தொடரில், கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அப்போது இவருக்கு வயது 47. விண்வெளிக் கப்பலின் கேப்டனாக, அமைதியான பேச்சு, கம்பீரமான உடல்மொழி, தெளிவான முடிவுகள் என அந்தக் கதாபாத்திரத்திற்கு தனி அடையாளத்தைக் கொடுத்தார்.

இந்தத் தொடர் ஏழு ஆண்டுகள் ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றதுடன், பேட்ரிக் ஸ்டீவர்ட்டையும் சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. குறிப்பாக, அவர் சொல்லும் Make it so என்ற வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. பின்னர் Star Trek திரைப்படங்களிலும், Star Trek: Picard தொடரிலும் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.

அடுத்ததாக, 2000-ம் ஆண்டு வெளியான X-Men திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் இன்னொரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. இதில் Professor Charles Xavier என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சூப்பர் பவர் கொண்ட மரபணு மாற்றம் பெற்ற மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களுக்காகப் போராடும் தலைவராகவும் இவர் நடித்த விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

PROFFESSOR X

Star Trek-ல் ஒரு கம்பீரமான கேப்டனாகப் பார்த்த ரசிகர்கள், X-Men படங்களில் அறிவும் அமைதியும் நிறைந்த Professor X ஆக அவரைப் பார்த்தார்கள். இரண்டு கதாபாத்திரங்களுமே அவருக்கு உலகளவில் ரசிகர்களை பெற்று தந்தது. X-Men, X2, X-Men: The Last Stand, Days of Future Past எனப் பல படங்களில் Professor X ஆகத் தொடர்ந்து நடித்தார்.

2022-ல் வெளியான Doctor Strange in the Multiverse of Madness படத்திலும் இந்தக் கதாபாத்திரத்தில் மீண்டும் தோன்றினார். இது மட்டுமல்லாமல், Dune, Conspiracy Theory உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அனிமேஷன் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு குரலும் கொடுத்துள்ளார். இவருடைய ஆழமான குரலும், ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரிக்கும் விதமும் தனி அடையாளமாகவே மாறின.

நடிப்புத் துறையில் தனது திறமையை வெளிப்படுத்திய பேட்ரிக் ஸ்டீவர்ட்டுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. குழந்தைகளுக்கான ஆடியோ ஆல்பத்திற்காக 1996-ம் ஆண்டு Grammy விருதை வென்றார். மேலும், நாடகத்துறையில் சிறந்த பங்களிப்புக்காக Olivier விருதுகளையும் பெற்றுள்ளார். 2010-ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நாட்டின் உயரிய Knight பட்டம் வழங்கி கௌரவித்தார். இதன் பிறகுதான் அவர் Sir Patrick Stewart என்று அழைக்கப்பட்டார்.

X - MEN

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து பயணித்த அவர், தனது 86 வயதிலும் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார். தற்போது வெளியாகவிருக்கும் Avengers: Doomsday படத்தின் டிரெய்லரிலும் Professor X கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் இந்தப் படம், மார்வெல் ரசிகர்களுக்கு அவரை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு வாய்ப்பாக அமையப்போகிறது.

3 முறை திருமணம் செய்த ஸ்டீவர்டுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். 2013ல் American musician Sunny Ozell - யை ஸ்டீவர்ட் திருமணம் செய்தார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம், தொலைக்காட்சி, சினிமா எனப் பல தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மறைவு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.